பிற மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல 3 மாத தடை: அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

பிற மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல 3 மாத தடை: அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு அரசு தடை விதித்த வழக்கில், அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

குமரி மாவட்டம், மார்த்தாண்டம், விளவங்கோட்டைச் சேர்ந்த லிபின் பொன்னுசுவாமி லீலா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை விதித்த கனிம வள இயக்குநரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சி.வி கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், “இந்த உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது. ஏற்கெனவே குஜராத்தில் பிறப்பிக்கப்பட்ட இதுபோன்ற உத்தரவை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்துள்ளது.

முறையாக அரசிடம் அனுமதி பெற்ற குவாரியிலிருந்து எடுக்கப்பட்ட மணலை கொண்டு செல்ல இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பில், “கனிவ வளங்கள் எடுப்பதை முறைப்படுத்தும் நோக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக 3 மாதங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், “இங்கு முறைப்படுத்தும் நோக்கத்துக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது. மனுதாரர்கள் கனிமங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்பவர்கள். அவர்களுக்கு விதிக்கு உட்பட்டு குவாரி செயல்படுகிறது என்பது எப்படி தெரியும்? எனவே, வழக்கு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கை வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

பிற மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல 3 மாத தடை: அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
டெல்டாவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வழங்க பழனிசாமி வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in