தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கோயில் சொத்துகளின் பட்டியலை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கோயில் சொத்துகளின் பட்டியலை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on: 
1 min read

மதுரை: தமிழகம் முழுவதும் கோயில் சொத்துகளின் முழு விவரங்களை மாவட்ட வாரியாகத் தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருத்தொண்டர் சபையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோயில், வைகுண்டபதி பெருமாள் கோயில்கள் மிகவும் பழமையானவை. இந்தக் கோயில்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்து செல்கின்றனர். இந்தக் கோயில்களுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. இதில் இருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்து கோயில்களில் பூஜைகள் நடத்தப்பட வேண்டும்.

இந்தக் கோயில்களுக்குச் சொந்தமான 630 ஏக்கர் நிலங்கள் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளன. இதேபோல் கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமான பல்வேறு வணிகக் கட்டிடங்களில் நீண்ட காலமாக வாடகை வசூலிக்கப்படாமல் உள்ளது. எனவே, ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் சொத்துகளை மீட்கவும், கோயில் கட்டிடங்களுக்கு முறையாக வாடகை வசூலிக்கவும் அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் மதுரை, கரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அறநிலையத் துறை கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களையும் மீட்டு கோயிலின் அன்றாட பூஜைகள் நடத்த உத்தரவிடக் கோரியும் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் வேல்முருகன், பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. தமிழக அரசு சார்பில், கோயில் நிலங்கள் மீட்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆக்கிரமிப்பாளர்கள் பலருக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘கோயில் நிலங்கள் மீட்பு குறித்து ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுகளை இதுவரை முறையாக நிறைவேற்றியதாகத் தெரியவில்லை. எனவே, தமிழகத்தில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்கள் எத்தனை உள்ளன? இந்தக் கோயில்களுக்குச் சொந்தமாக எத்தனை ஏக்கர் நிலங்கள் உள்ளன? அதில் கட்டளை சொத்துகள் எவ்வளவு உள்ளன? இந்தச் சொத்துகளில் கோயில் வசம் எவ்வளவு சொத்துகள் உள்ளன? தனிநபர் ஆக்கிரமிப்பில் எத்தனை ஏக்கர் நிலங்கள் உள்ளன? ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? ஆக்கிரமிப்பாளர்களின் பெயர் விவரங்கள், அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பரப்பளவு எவ்வளவு ? கோயில் நிலங்கள் தொடர்பாக எத்தனை வழக்குகள் உள்ளன? என்பது குறித்து மாவட்ட வாரியாக அறநிலையத் துறை ஆணையர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த அறிக்கை அடிப்படையில் கோயில் நிலங்களை மீட்கக் குழு அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும். விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கோயில் சொத்துகளின் பட்டியலை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
பாலியல் புகார் வழக்கில் கருப்பு முருகானந்தத்துக்கு முன்ஜாமீன் மறுப்பு: மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in