மு.க.அழகிரி மகன் தயாநிதியை மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவு

 கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் தயாநிதியை ஜிப்மர் மருத்துவமனையில் மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை கீழவளவு காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள வழக்கில் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், அமலாக்கத் துறை சுமார் ரூ.256.44 கோடி மதிப்பிலான சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைத் தடைச் சட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி மீது வழக்குப் பதிவு செய்தது.

விசாரணையின்போது, ஏற்கெனவே நரம்பியல் குறைபாடு மற்றும் பக்கவாதம் காரணமாக விசாரணையை எதிர்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக தயாநிதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை அளித்த மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் தயாநிதி மீதான வழக்கு தனியாகப் பிரிக்கப்பட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், அமலாக்கத் துறை வழக்கு மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை வழக்கறிஞர் வாதிடுகையில், ‘தயாநிதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டுகளித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

மேலும், நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் வாக்களித்து, அது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இதிலிருந்து அவர் நலமுடன் இருப்பது தெரியவருவதால், புதுச்சேரி ஜிப்மர் அல்லது எய்ம்ஸ் மருத்துவக் குழு மூலம் அவருக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்’ என்றார்.

தயாநிதி தரப்பு வழக்கறிஞர் வாதிடும்போது, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மனநலக் குறைபாடு ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சமூக வலைதளப் படங்களை வைத்து மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிட முடியாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மதுரை கூடுதல் மாவட்ட மற்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.சண்முகவேல் பிறப்பித்த உத்தரவு:

கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்ப்பதும், தேர்தலில் வாக்களிப்பதும் சாத்தியப்படும்போது, நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்வதில் என்ன தடை இருக்க முடியும்?

தயாநிதியின் தற்போதைய மனநிலை, புரிந்துகொள்ளும் திறன் மற்றும் உடல் தகுதியை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஆய்வு செய்ய வேண்டும்.

ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர், முதன்மை மனநல மருத்துவர், கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் மற்றும் முதன்மை நரம்பியல் வல்லுநர் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவை அமைத்து தயாநிதியை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.

தேவைப்பட்டால் தயாநிதியை மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்து ஆய்வு செய்யும் அதிகாரமும் ஜிப்மர் இயக்குநருக்கு வழங்கப்படுகிறது.

ஜிப்மர் மருத்துவக் குழுவின் பரிசோதனைக்கு தயாநிதி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், மருத்துவப் பரிசோதனைக்குப் பின், அதன் அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்துக்கு நேரடியாக அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

<div class="paragraphs"><p> கோப்புப்படம்</p></div>
மேட்டூர் அணை நீர் மட்டம் 194 நாட்களுக்குப் பின் 90 அடியை எட்டியது!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in