

கோப்புப் படம்
மதுரை: கன்னியாகுமரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டு வந்த கல் குவாரிகளை மூடவும், குவாரிகளில் கனிமவள உதவி இயக்குநர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு புத்தன்கடை சுரேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நெல்லையைச் சேர்ந்த கிரஷர் யூனிட்டுக்கு குவாரி கற்களை கொண்டு செல்வதற்கு போக்குவரத்து அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது.
இந்த அனுமதி சீட்டை சட்டவிரோதமாக பயன்படுத்தி கன்னியாகுமரி மாவட்டம் மேக்கோடு பகுதியில் செயல்படும் புளூமெட்டல் நிறுவனம் லாரிகள் மூலம் கற்களை கேரளாவுக்கு கடத்திச் செல்கிறது.
இந்த கடத்தலையும், அங்கு நடைபெறும் சட்டவிரோத கல் குவாரி நடவடிக்கைகளையும் தடுக்கக் கோரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், கனியவளத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். அந்த மனு அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புகைப்படங்களை பார்க்கையில் கற்கள் கொண்டு செல்லும் பணி தொடர்ந்து நடைபெறுவது தெரிகிறது.
இதுதொடர்பாக ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையராக முகமதுமுகைதீன் நியமிக்கப்படுகிறார். அவர் கனிமவளத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அதன்படி முகமதுமுகைதீன் ஆய்வு நடத்தி உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், வழக்கறிஞர் ஆணையர் அறிக்கையில் குவாரிகளில் விதிமீறல் இருப்பதாகவும், அனுமதித்த அளவைவிட 200 அடி ஆழம் வரை கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனுமதிச் சீட்டு நகலை காட்டவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் குவாரிகளை மூட வேண்டும். குவாரிகளை மாவட்ட கனிமவள உதவி இயக்குநர் ஆய்வு செய்ய வேண்டும்.
சட்டவிரோதமாக எவ்வளவு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன, சுற்றுச்சூழல் பாதிப்பு என்ன, எவ்வளவு அபராதம் விதிப்பது என்பது குறித்து ஜூன் 10-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.