

மதுரை: கைவிடப்பட்ட போர்வெல் மற்றும் குவாரி பள்ளங்களை மூட 6 வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த காந்திமதிநாதன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: தூத்துக்குடி மாவட்டம் மீரான்குளத்தில் கடந்த ஆண்டு மீரான்குளம் - சிந்தாமணி சாலையில் சென்று கொண்டிருந்த கார் சாலையோரத்தில் தடுப்புச் சுவர் இல்லாமல் இருந்த திறந்தவெளி கிணற்றில் விழுந்தது. இதில் 5 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். எப்போதும் தண்ணீர் நிரம்பியிருக்கும் சாலையோரக் கிணறுகளில் நிரந்தர தடுப்புகள் இல்லாததால் கொடூர விபத்துகள் நடந்து மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
தூத்துக்குடி சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள கைவிடப்பட்ட மற்றும் செயலிழந்த திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் குவாரி பள்ளங்களை கண்டறிந்து விரிவான கணக்கெடுப்பு நடத்தவும், பசுமை நிதி மற்றும் மாவட்ட கனிம நிதியை பயன்படுத்தி பொதுமக்களும், கால்நடைகளும் எளிதில் அணுகாதவாறு வேலிகள் அமைக்கவும் கடந்த 2023-ல் அப்போதைய தலைமைச் செயலர் உத்தரவிட்டார்.
கைவிடப்பட்ட கிணறுகளின் பாதுகாப்பு தொடர்பான கண்டிப்பான விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே 2010-ல் வகுத்துள்ளது. எனவே, பொதுச் சாலைகளின் ஓரங்களில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள அனைத்து திறந்தவெளிக் கிணறுகள், பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் குவாரி பள்ளங்களை மூடவும், பாதுகாப்பு வேலி அமைக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு மீது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கைவிடப்பட்ட சாலையோர கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், குவாரி பள்ளங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? ட்ரோன் மூலமாக எங்கெல்லாம் கைவிடப்பட்ட கிணறுகள் உள்ளன என்பதைக் கண்டறிந்து அவற்றை மூட நடவடிக்கை எடுக்கலாமே?
குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக கற்களை வெட்டி எடுத்துவிட்டு சென்று விடுகின்றனர். அதை மூடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அந்த பள்ளத்தில் விழுந்து குழந்தைகள் உட்பட பலர் உயிரிழக்கின்றனர். எனவே, கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள், குவாரி பள்ளங்களை மூட 6 வாரங்களில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.