மடப்புரம் அஜித்குமார் மீதான நகை திருட்டு வழக்கு நிலை என்ன? - சிபிஐ அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது பதிவு செய்யப்பட்ட நகை திருட்டு வழக்கின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சிபிஐக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டு வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். போலீஸார் கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் கண்ணன், ஆனந்த், பிரபு, ராஜா, சங்கர மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றியது.
சிபிஐ விசாரணை நடத்தி மதுரை 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், தனிப்படை வேன் ஓட்டுநரும், காவலருமான ராமச்சந்திரன் 6-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். பின்னர் அவரும் கைது செய்யப்பட்டார்.
கூடுதல் குற்றப்பத்திரிகையில் மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா ஆகியோரது பெயர்கள் சேர்க்கப்பட்டன.
இந்நிலையில், தனிப்படைக் காவலர்கள் கண்ணன், ஆனந்த், பிரபு, ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
அப்போது உயிரிழந்த அஜித்குமாரின் தாயார் தரப்பில், தனிப்படை காவலர்களுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கறிஞர் ஹென்றி திபேன் வாதிடும்போது, “அஜித்குமார் காவல் மரணம் தொடர்பான வழக்கில்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அஜித்குமார் மீது நிகிதா என்பவர் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்த நகை திருட்டு வழக்கையும் சிபிஐ விசாரித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் காலக்கெடு விதித்திருந்தது.
விசாரணை பாதிக்கும்... எனினும், அந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. அந்த வழக்கின் விசாரணை எந்த நிலையில் இருக்கிறது என்பது தெரியவில்லை. விசாரணை நிலுவையில் இருக்கும்போது, தனிப்படை காவலர்களுக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும்” என்றார்.
சிபிஐ தரப்பிலும் தனிப்படை காவலர்கள் 5 பேருக்கும் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி, அஜித்குமார் மீது பதிவு செய்யப்பட்ட நகை திருட்டு வழக்கின் தற்போதைய நிலை குறித்து சிபிஐ பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை பிப். 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
