

சென்னை: பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளில், விஜய் மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளிட்டோர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.டி.சேகர் மற்றும்
அத்தொகுதி வாக்காளர்களான தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர். இதேபோல திருச்சி கிழக்கில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளரான இனிகோ இருதயராஜும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகள் மீதான விசாரணை, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக நேற்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி இதுதொடர்பாக முதல்வர் விஜய் மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளிட்டோர் 3 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
இதேபோல, வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் மற்றும் சிவராஜ் ஆகியோர் தாக்கல் செய்திருந்த தேர்தல் வழக்குகளை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், இதுதொடர்பாக ஆதவ் அர்ஜுனா மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.