

சென்னை: போக்சோ வழக்கில் கைதான ஜெம் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோரை மீண்டும் 2 நாட்கள் போலீஸார் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சிறுமிகளை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட் உரிமையாளரான வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கில் ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோரை போலீஸார் ஏற்கெனவே காவலில் எடுத்து விசாரித்த நிலையில், கணேசனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியிருந்தது.
அதேபோல பணப்பரிவர்த்தனை தொடர்பாக ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என சிறப்பு புலனாய்வுக்குழு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா, போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெம் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகிய 3 பேரையும் மீண்டும் 2 நாட்கள் போலீஸார் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தும், கணேசன் உள்ளிட்ட 4 பேரையும் வரும் திங்கட்கிழமையன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.