கோயில்கள் வகைப்பாட்டில் நிபுணர்களின் கருத்து அவசியம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கோயில்கள் வகைப்பாட்டில் நிபுணர்களின் கருத்து அவசியம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
Updated on: 
2 min read

மதுரை: தமிழகத்தில் ஆகமம், ஆகமம் இல்லாத கோயில்கள் வகைப்பாட்டு பட்டியல் தயாரிப்பில் ஆகம நிபுணர்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பெரிய நம்பி நரசிம்ம கோபாலன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைமுறையில் இருந்து வரும் பூஜைகள், வழிபாட்டு முறைகள் ஆகம விதிகளின்படி நடைபெறுகிறதா? அல்லது தொன்று தொட்டு வரும் மரபு மற்றும் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் நடைபெறுகிறதா? என்ற அடிப்படையில் கோயில்களை வகைபாடு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக்குழு வெளியிட்டுள்ள முதற்கட்ட பட்டியலில் சுமார் 7,461 கோயில்கள் மட்டுமே ஆகமவிதிகளின்படி பூஜைகள் நடைபெறுவதாகவும், சுமார் 27,150 கோயில்கள் ஆகம விதியைப் பின்பற்றாமல் மரபு/ பழக்க வழக்கத்தின் அடிப்படையில் பூஜைகள் நடைபெறும் கோயில்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இப்பட்டியலுக்குப் பொதுமக்களிடம் இருந்து ஆட்சேபனைகள் மற்றும் கருத்துகள் கோரப்பட்டுள்ளன. கோயில்களை வகைப்படுத்த அமைக்கப்பட்டுள்ள குழுவில் ஆகம வல்லுநர்கள் இடம் பெறவில்லை. கோயிலில் நடைபெறும் பூஜையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஆகமம் பின்பற்றப்படுகிறதா? இல்லையா? என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகமம் என்பது வெறும் பூஜை அல்லது அர்ச்சனை செய்யும் முறையை மட்டும் குறிப்பிடும் நடைமுறை அல்ல. கோயில் அமைப்பு, ஆலய நிர்மாணம், மூர்த்தி பிரதிஷ்டை, சந்நிதிகளின் அமைவிடம், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளின் நிலை, கருவறை, விமானம், கோபுரம், கொடிமரம், பலி பீடம், மண்டபங்கள், பிரகாரங்கள், தீர்த்தம் உள்ளிட்ட ஆலயத்தின் பல்வேறு கட்டமைப்பு மற்றும் வழிபாட்டு அம்சங்களை விரிவாக நிர்ணயிக்கும் சாஸ்திர மரபே ஆகமம் என்பதாகும்.

ஒரு கோயிலில் நடைபெறும் பூஜைகள் ஆகம விதிப்படி நடைபெறுகிறதா என்பதை அந்தந்த ஆகமங்களில் ஆழ்ந்த புலமை பெற்ற ஆகம வல்லுநர்கள், சம்பிரதாய அறிஞர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களால்தான் முடியும். தற்போதைய குழுவில் ஆகம சாஸ்திரத்தில் தகுந்த கல்வி, பயிற்சி மற்றும் அனுபவம் பெற்ற ஆகம வல்லுநர்கள் இடம்பெறவில்லை. நிர்வாக அனுபவம் மட்டுமே ஒரு கோயிலின் ஆகம நடைமுறைகளைத் தீர்மானிக்கப் போதுமான தாகுதியாக இருக்க முடியாது.

எனவே, கோயில் வகைப்பாடு தொடர்பான குழுவில் ஆகம வல்லுநர்கள், தல வராலற்று அறிஞர்கள், சம்பிரதாய நிபுணர்கள் மற்றும் பிற தேவையான துறைசார் நிபுணர்களை இணைத்து மறு வகைப்பாடு செய்யவும், அதுவரை தற்போது வெளியிடப்பட்டுள்ள கோயில் வகைப்பாடு பட்டியலுக்குத் தடை விதிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், ‘ஆகம கோயில்கள், ஆகம் அல்லாத கோயில்களின் வரைவுப் பட்டியல்தான் வெளியிடப்பட்டுள்ளது. இது இறுதிப் பட்டியல் அல்ல. பொதுமக்களிடம் ஆட்சேபனை கோரப்பட்டுள்ளது’ எனக் கூறப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், ‘ஆகம கோயில்களை முடிவு செய்யும்போது ஆகம நிபுணர்களிடமும் கருத்துக் கேட்பது முக்கியமானது. எனவே கோயில் ஆகம நிபுணர்களிடமும் கருத்துக் கேட்க வேண்டும்’ என்றனர்.

அதற்கு அரசுத் தரப்பில், ‘ஆகம நிபுணர்களிடம் கருத்து பெறப்படும். அதன் பிறகே கோயில் வகைப்பாடு இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்’ எனக் கூறப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்டு மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

கோயில்கள் வகைப்பாட்டில் நிபுணர்களின் கருத்து அவசியம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
தங்கம், வெள்ளி வென்ற துளசிமதி முருகேசனுக்கு ரூ.1.25 கோடி ஊக்கத் தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in