

அண்ணாமலை
சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தவெக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, தனது எக்ஸ் தளப் பதிவில், “கடந்த 2022-ம் ஆண்டு வழங்கப்பட்ட சாலை ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலுவுக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து சோதனை நடத்தியுள்ளது.
கடந்த கால திமுக ஆட்சியில் நடந்த ஊழல் புகார்களை விசாரிக்க தவெக அரசு எடுத்துள்ள இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று நான் மனதார நம்புகிறேன். இதேபோல், கடந்த 5 ஆண்டுகளில் வெளிச்சத்துக்கு வந்த இன்னும் பல ஊழல்கள் குறித்தும் தவெக அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த வகையில், பிஜிஆர் எனர்ஜி ஊழல், ஊட்டச்சத்து பெட்டக ஊழல், பொங்கல் வேட்டி ஊழல், போக்குவரத்துத் துறை ஊழல்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் போன்றவற்றையும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் ஒரு மர்மத்தையும் தவெக அரசு துலக்கும் என்று நம்புகிறோம். உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்றமும், 'நோபல் ஸ்டீல்ஸ்' நிறுவனமும் ஒரே முகவரியில் இயங்குவது எப்படி?
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணத்துக்குப் பிறகு, நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது (அந்த முதலீடு இன்னும் அறிவிப்பு அளவிலேயே இருக்கிறது). இந்த விசித்திரமான ஒற்றுமை குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.