

சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மீது அமலாக்கத் துறை அனுப்பிய முறைகேடு புகார் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு அதிகாரிகள், ஊழியர்களை நியமித்ததில் ரூ.1,020 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும், பணியின் தன்மையைப் பொருத்து, ஒவ்வொருவரிடமும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சப் பணம் கைமாறியதாகவும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது.
இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை அடுத்தடுத்து 2 புகார் கடிதங்களையும் அனுப்பியது. குறிப்பாக அமைச்சர் நேரு மற்றும் அவரது சகோதரர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினர். தன் மீதானகுற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சர் நேரு, இதை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே, அமலாக்கத் துறை அனுப்பிய கடிதங்களின் அடிப்படையில், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல் துறையின் லஞ்ச ஒழிப்பு பிரிவில் அதிமுக எம்.பி. இன்பதுரை புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், அமலாக்கத் துறை அனுப்பிய 2 புகார் கடிதங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து கேட்டபோது லஞ்ச ஒழிப்புத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: யார் புகார் கொடுத்தாலும் விசாரணை நடத்துவோம். அந்த வகையில், அமலாக்கத் துறையினர் அனுப்பிய 2 கடிதங்களும் எங்களுக்கு வந்தன. அதுதொடர்பாக தனிப்படை அமைத்து ஆரம்பகட்ட விசாரணையை தொடங்கிஉள்ளோம். புகாரில் முகாந்திரம் இருந்தால், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, வழக்கு பதிவு உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.