இசிஆரில் விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பாக மாநகராட்சி நோட்டீஸ்: மேல்முறையீடுகளை விரைந்து முடிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

இசிஆரில் விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பாக மாநகராட்சி நோட்டீஸ்: மேல்முறையீடுகளை விரைந்து முடிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: இசிஆர் கடற்கரையையொட்டி விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பாக மாநகராட்சி அனுப்பியுள்ள நோட்டீஸை எதிர்த்து தொடரப்பட்டுள்ள மேல்முறையீடுகளை மே மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையான இசிஆரில் நீலாங்கரை முதல் உத்தண்டி வரையுள்ள பகுதிகளில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்குப் புறம்பாக கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் கட்டப்பட்டுள்ள ரிசார்ட்டுகள் மற்றும் பங்களாக்களை இடிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட் டிருந்தன.

இந்த வழக்குகளில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 798 கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி கடந்த 2018-ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

குறிப்பாக, தற்போதைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் எம்.பி, தவெக தலைவரும், நடிகருமான விஜய் மற்றும் தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த வழக்கு 6 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் கிடந்த நிலையில், நீதிபதிகள் அனிதா சுமந்த், எம்.சுதீர்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னை மாநகராட்சியின் நோட்டீஸை எதிர்த்து 798 உரிமையாளர்களில் 440 பேர் அரசிடம் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், 84 மேல்முறையீடுகள் முடித்து வைக்கப்பட்டு வி்ட்டதாகவும், எஞ்சிய மேல் முறையீடுகள் நிலுவையில் உள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நிலுவையில் உள்ள எஞ்சிய மேல்முறையீடுகள் குறித்தும் கட்டிட உரிமையாளர்கள் தரப்பில் விளக்கமளிக்க, மார்ச் 30 வரை அவகாசம் வழங்கி, மேல்முறையீட்டு மனுக்கள் மீது மே 31-க்குள் முடிவெடுக்க வேண்டும், என சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

அப்போது இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் தரப்பில், ‘‘சென்னையின் மிக நீண்ட கடற்கரை பகுதிகளில் அரிய வகை ஆமையினங்கள் இனப்பெருக்கம் செய்வதால் உத்தண்டிக்கு அப்பால் உள்ள கடற்கரை பகுதிகளிலும் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களைக் கணக்கெடுத்து அகற்ற உத்தரவிட வேண்டும்’’ எனக் கோரப்பட்டது. அதற்கு, அதுகுறித்து பின்னர் பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இசிஆரில் விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பாக மாநகராட்சி நோட்டீஸ்: மேல்முறையீடுகளை விரைந்து முடிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
கேசவ விநாயகன் கவனித்து வந்த பணிகளை ஒருங்கிணைக்க பாஜகவில் 3 பேர் குழு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in