வகை பிரிக்கப்பட்ட கழிவுகளை மட்டுமே தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

வகை பிரிக்கப்பட்ட கழிவுகளை மட்டுமே தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு ஏதுவாக, அனைத்து குடியிருப்புவாசிகள், வணிக நிறுவனங்கள், திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ன்படி திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே வகை பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ன்படி, உணவுக் கழிவுகள், காய்கறி மற்றும் பழத்தோல்கள், பூக்கள் மற்றும் பிற மக்கும் கழிவுகளை பச்சை நிற தொட்டியில் போட வேண்டும். காகிதம், பிளாஸ்டிக், உலோகம், அட்டைப்பெட்டிகள், துணி மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய மக்காத குப்பைகளை நீல நிற தொட்டியில் போட வேண்டும்.

பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்கள், டயப்பர்கள், பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கட்டுப் பொருட்கள் போன்ற சுகாதார கழிவுகளை பாதுகாப்பாக சுற்றி தனியாக சிவப்பு நிற தொட்டியில் போட வேண்டும்.

பேட்டரிகள், மின் விளக்குகள், டியூப் லைட்கள், மின்னணுக் கழிவுகள், காலாவதியான மருந்துகள், பெயிண்ட் டப்பாக்கள் உள்ளிட்ட வீட்டு அபாயகரக் கழிவுகளை தனியாக கருப்பு தொட்டியில் போட வேண்டும்.

தூய்மைப் பணியாளர் வரும் போது, அந்த வாகனத்தில் இந்த வண்ண தொட்டிகள் இருக்கும். இதன்மூலம் மக்கும் கழிவுகளை உரமாக மாற்றவும், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மீட்டெடுக்கவும், குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும் கழிவுகளின் அளவை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தவும் முடியும்.

எனவே, அனைவரும் வகை பிரிக்கப்பட்ட கழிவுகளை மட்டுமே மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். விதிகளை மீறினால் அபராதம் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வகை பிரிக்கப்பட்ட கழிவுகளை மட்டுமே தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்
பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி: 2 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in