

முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்களாக பதவியேற்ற விசிகவின் வன்னியரசுக்கு சமூக நீதித் துறையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஷாஜகானுக்கு வக்பு வாரியம், சிறுபான்மையினர் நலத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தவெக அமைச்சரவையில் விசிக, ஐயுஎம்எல் இடம்பெற்ற நிலையில் அநாகரிகமாகவும், ஒருமையிலும் ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் விமர்சனம் செய்துள்ளனர். இதற்கு விசிகவும் தக்க பதிலடி தந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தோல்வி அடைந்த திமுக எதிர்க்கட்சியாகியுள்ளது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், அக்கூட்டணியில் இருந்து விலகி, தவெகவுடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம்பெற்றது.
அதேபோல், திமுக கூட்டணி கட்சிகளான விசிக, ஐயூஎம்எல் கட்சிகளும் தவெக அமைச்சரவையில் பங்கேற்றன. தேர்தலில் தோல்வி அடைந்து ஆட்சியை இழந்த நிலையில், கூட்டணியும் உடைந்ததால் திமுக கடும் கோபத்தில் உள்ளது.
தவெக அமைச்சரவையில் விசிக, ஐயுஎம்எல் இடம்பெற்றது குறித்து, திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசா தனது எக்ஸ் வலைதளப் பதிவில், “முன்‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’ மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’ வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி - புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை! பெரியாரின் ‘காலதேச வர்த்தமான’த்திற்கு காத்திருப்போம்; என்றாலும் களமாடுவோம்! வெற்றி நமக்கே!!” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவு விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் கட்சியினரையும் பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக பெண்கள் அமைப்பினரும் சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்தப் பதிவை ஆ.ராசா நீக்கினார்.
இதனை தொடர்ந்து ஆ.ராசா தனது எக்ஸ் வலைதளத்தில் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டார் அதில், “என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் “முடத்தெங்கு”! அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? வாழ்க தமிழ்” என்று பதிவிட்டுள்ளார்.
அதன்பின், ஆ.ராசாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், விசிகவின் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி எக்ஸ் வலைதளப் பதிவில், “அதிகாரம் எளியவர்க்கு - அதிலென்ன ஆத்திரம்; ஆற்றாமையால் அள்ளிவீசும் அவதூறுகள் அசைத்திடாது. அமைதியாய் கடப்பது அநாகரீகம் தவிர்க்கவே. அநீதி தொடர்ந்து - அனைத்தும் உரைத்தால் அணைக்க முடியா அனலில் தகித்து போவீர்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில், “தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறுவது பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நாங்கள் இல்லாத அமைச்சரவையில் எவன் இருந்தால் என்ன, எவன் போனால் என்ன. அதைப்பற்றி எங்களுக்குக் கவலையும் இல்லை. அக்கறையும் இல்லை” என்று ஒருமையில் மிகக்கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார்.
இதனிடையே, “தேர்தலுக்குப் பின் கூட்டணியை முடிவு செய்யும் உரிமை, அந்தந்தக் கட்சிகளுக்கு உள்ளது. எந்தக் கட்சியும் திமுகவுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கவில்லை. அப்படி இருக்கையில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா, விசிக மற்றும் விசிக தலைவர் திருமாவளவனை பார்த்து சொல்லக் கூடாத வார்த்தையை பதிவு செய்துள்ளார். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
ஒரு கட்சியையோ, ஒரு தலைவரையோ பெண்ணின் உறவுடன் தொடர்புபடுத்திப் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. திமுகவிடம் இன்று கடமையும் இல்லை, கண்ணியமும் இல்லை, கட்டுப்பாடும் இல்லை. இந்த 3 கோட்பாடையும் மறந்துவிட்டார்கள். இதற்கு திமுக தலைவரின் கருத்து என்ன?” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காட்டமாக கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, “தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே திமுகவினர் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.