கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை: குஜிலியம்பாறை வட்டாட்சியர் பணியிட மாற்றம்

குஜிலியம்பாறை வட்டாட்சியராக இருந்த அய்யாச்சாமி (இடது)

குஜிலியம்பாறை வட்டாட்சியராக இருந்த அய்யாச்சாமி (இடது)

Updated on
2 min read

திண்டுக்கல்: கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை வெளியிட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாச்சாமி பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா பிறப்பித்த உத்தரவில், “பழநி வருவாய் கோட்டாட்சியரின் அறிக்கையினை கருத்தில் கொண்டு, குஜிலியம்பாறை வருவாய் வட்டாட்சியராகப் பணிபுரிந்து வரும் மு.அய்யாசாமி என்பவரை, சென்னை வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தில், தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமையில் பணியேற்பு செய்திட உத்தரவிடப்படுகிறது. இதன்பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில், குஜிலியம்பாறை வட்டாட்சியர் பணியிலிருந்து அவரை விடுவித்து ஆணையிடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா வட்டாட்சியராக அய்யாச்சாமி பணிபுரிந்து வந்தார். கடந்த வாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்கள் பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு வட்டாட்சியர் அய்யாச்சாமியிடம் மக்களுடன் சென்று மனு அளிக்கச் சென்றனர்.

வட்டாட்சியரிடம் மனு அளிக்கும்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் அலைபேசியில் புகைப்படம் எடுத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வட்டாட்சியர் புகைப்படம் எடுக்கக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றியதால், கட்சியினரை கைது செய்யச் சொல்வேன் எனக் கூறி போலீஸாரையும் வரவழைத்துள்ளார். அங்கு வந்த போலீஸார் வட்டாட்சியருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமாக போகச் செய்தனர். இதையடுத்து வட்டாட்சியர் அய்யாச்சாமி, குஜிலியம்பாறை தாலுகாவிற்குட்பட்ட வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார்.

இதில், அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளில் உள்ளவர்களின் பெயர், முகவரி ஆகியவற்றை சேகரித்து வருவாய் ஆய்வாளர்கள் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து கிராம உதவியாளர்களும் வருவாய் ஆய்வாளருக்கு உதவிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது, தவறும் கிராம உதவியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் குஜிலியம்பாறை வட்டாட்சியரை எதிர்த்து ஆகஸ்ட் 20 வியாழக்கிழமை போராட்டத்தை அறிவித்தனர்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட எம்.பி ஆர்.சச்சிதானந்தம் வெளியிட்ட அறிக்கையில், “கைரேகைச் சட்டம் அமலில் இருந்த காலத்திலும், அரசியல் இயக்கங்கள் தடை செய்யப்பட்ட காலத்திலும் கூட இதுபோன்ற சுற்றறிக்கையை வட்டாட்சியர்களால் பிறப்பிக்கப்பட்டதில்லை.

ஒரு தேசிய அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் பற்றிய விவரம் சேகரிக்க சொல்லி பகிரங்க சுற்றறிக்கை அனுப்பும் வானளாவிய அதிகாரம் குஜிலியம்பாறை வட்டாட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளதா. மணல் கடத்துவோர் பட்டியலையோ, ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலையோ, குற்றவாளிகள் பட்டியலையோ இதுபோன்று சுற்றறிக்கை போட்டு சேகரித்து வைத்துள்ளாரா?.

பொதுமக்கள் வட்டாட்சியரை சந்திப்பதற்கு வாரத்தில் நான்கு நாட்கள் பகல் 12 to 1 மணி வரை மட்டுமே அனுமதி எனவும், மனு கொடுக்க வரும் பொதுமக்கள் அலைபேசி கொண்டு வரக்கூடாது எனவும் அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்தும் அய்யாசாமி என்ற வட்டாட்சியரை வருவாய்த்துறை திரும்பப் பெற்றுக் கொண்டு மக்களுக்கு உதவ வேண்டுகிறோம்.” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரச்சினை பெரிதாவதை அறிந்த மாவட்ட ஆட்சியர் துர்கா, வட்டாட்சியரின் சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். அவர் வெளியிட்ட அறிவிப்பில், “குஜிலியம்பாறை தாலுகாவிற்குட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளில் உள்ள நபர்களின் விபரங்களை திரட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை உடனடியாக திரும்பபெறப்படுகிறது,” என தெரிவிக்கப்பட்டது.

மேலும் வட்டாட்சியரிடம் பழநி கோட்டாச்சியர் (பொறுப்பு) பிரபு விசாரணை நடத்தினார். இந்நிலையில், குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாச்சாமி பணியிடமாற்றம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>குஜிலியம்பாறை வட்டாட்சியராக இருந்த அய்யாச்சாமி (இடது)</p></div>
போதைப்பொருள் ஒழிப்பு அதிரடிப் படை அவசியம்: அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in