

மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சியின் நகரமன்ற தலைவரின் கணவரான குமார் என்பவர், ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரரை சாதியை கூறி ஒருமையில் இழிவாகப் பேசியதை கண்டித்து 70-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், நகராட்சி அலுவலகத்தில் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சியில் 24 வார்டுகள் அமைந்துள்ளன. இப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை கழிவுகளை அகற்றும் பணிகளை, நகராட்சி நிர்வாகம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமித்து மேற்கொண்டு வருகிறது.
இப்பணிகளில் 70-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுராந்தகம் நகராட்சியின் நகரமன்ற தலைவராக உள்ள மலர்விழியின் கணவரான குமார் என்பவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தூய்மைப் பணியாளர்களின் ஒப்பந்ததாரரான மனோகர் என்பவரை சாதி அடிப்படையில் ஒருமையில் இழிவாகப் பேசியதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து, தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் இன்று பணிக்கு செல்லாமல், நகராட்சி அலுவலகத்தின் நுழைவாயிலில் அமர்ந்து 70-க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நகராட்சி ஆணையர் மற்றும் போலீஸார் தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில், சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு உரிய தீர்வு காணப்படும் என ஆணையர் உறுதியளித்தார். இதையடுத்து, ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தற்காலிகமாக தர்ணா போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்து கலைந்து சென்றனர். தூய்மைப் பணியாளர்களின் தர்ணா போராட்டம் காரணமாக, நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.