

கோப்புப்படம்
தென்காசி / நாகர்கோவில் / மதுரை: தொடர் மழையால் பூக்கள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சிவகாமிபுரம் சந்தையில் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் பூக்கள் சாகுபடி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விலை உயர்ந்தது. கடந்த வாரம் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் விலை குறையத் தொடங்கியது. இந்நிலையில், நேற்று பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது.
சிவகாமிபுரம் சந்தையில் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. பிச்சிப்பூ, முல்லைப் பூ ரூ.2 ஆயிரம், காக்கட்டான் ரூ. 1,000, கனகாம்பரம் ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ சம்பங்கி ரூ.160 முதல் ரூ.200 வரையும், நந்தியாவட்டை ரூ.250, ரோஜா ரூ.160 முதல் ரூ.290, அரளிப்பூ ரூ.260, மரிக்கொழுந்து, கோழிக்கொண்டை ரூ.200, கேந்தி ரூ.30 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல, தென்காசி, சங்கரன்கோவில் சந்தையிலும் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, “தொடர் மழையால் பூக்கள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. மல்லிகைப் பூ வழக்கமாக தினமும் சராசரியாக 200 கிலோ முதல் 300 கிலோ வரை விற்பனைக்கு வரும். தற்போது அதிகபட்சம் 15 கிலோ வரையே வருகிறது. நவ. 30, டிச. 1 ஆகிய நாட்கள் முகூர்த்த தினங்கள் என்பதால் பூக்களுக்கு தேவை அதிகமாக உள்ளது. ஆனால், வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே அனைத்து வகை பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது” என்றனர்.
தொடர் மழை, பனிப்பொழிவால் குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் நேற்று மல்லிகைப்பூ கிலோ ரூ.5,000-க்கும், பிச்சிப்பூ கிலோ ரூ.2,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் நீடிக்கும் தொடர் பனி, சாரல் மழையால் மல்லிகைப் பூ உற்பத்தி முற்றிலும் முடங்கியது. மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.4.500 வரை விற்கப்பட்டது.
மதுரை மாட்டுத்தாவணி மொத்த பூ வியாபாரிகள் சங்கப் பொருளாளர் முருகன் கூறும்போது, “தற்போது மொத்த பூக்களின் வரத்தே அரை டன் முதல் முக்கால் டன் வரைதான் உள்ளது. முகூர்த்தமே இல்லாத இன்று (நேற்று) மதுரை மல்லி விலை உயர்ந்துள்ள நிலையில், இனிவரும் முகூர்த்த நாட்களில் விலை மேலும் அதிகரிக்கும்’ என்றார்.