

கோவை: கோவை கவுண்டம்பாளையத்தில் 13 வீடுகளில், தொடர் திருட்டில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த 3 கொள்ளையர்கள் சுட்டு பிடித்து கைது செய்யப்பட்டனர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையத்தில், தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில் 1,848 வீடுகள் உள்ளன. அரசுத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் இங்கு வசிக்கின்றனர். இந்நிலையில், ஊழியர்கள் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றனர். மாலை வந்து பார்த்தபோது, சிலரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் கலைந்து கிடந்தன. வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த நகை, பணம் திருடப்பட்டிருந்தது.
42 பவுன் நகை திருட்டு: இதுகுறித்து தகவல் அறிந்த, இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி தலைமையிலான கவுண்டம்பாளையம் போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அதில், ‘ஏ’ பிளாக்கில் உள்ள 3 வீடுகளிலும், ‘சி3’ பிளாக்கில் 10 வீடுகளிலும் என மொத்தம் 13 வீடுகளின் பூட்டை உடைத்து 42 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் பணம், 500 கிராம் வெள்ளிப் பொருட்கள் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் வீட்டில் மட்டும் 30 பவுன் நகை திருடு போயிருந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், கவுண்டம்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களை பிடிக்க, மாநகர காவல் ஆணையர் ஆ.சரவண சுந்தர் தலைமையில், துணை ஆணையர் தேவநாதன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, குடியிருப்பு வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், சந்தேகத்துக்குரிய முறையில் இருவர், கையில் பொருட்களை எடுத்துச் செல்வது தெரிந்தது. போலீஸாரின் புலன் விசாரணையில், இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேர் கும்பல், குனியமுத்தூர் பி.கே.புதூரிலிருந்து குளத்துப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள திருநகர் காலனியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பது தெரிந்தது.
தப்ப முயற்சி: தனிப்படை போலீஸார் நேற்று காலை அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். வீட்டில் இருந்த மூவரையும் சரணடையும்படி எச்சரிக்கை செய்தனர். ஆனால், அவர்கள் அரிவாளால் போலீஸாரை வெட்டிவிட்டு தப்ப முயன்றனர். அவர்கள் வெட்டியதில் போலீஸ்காரர் பார்த்திபன் காயமடைந்தார். தொடர்ந்து போலீஸார் தங்களிடமிருந்த துப்பாக்கியால் மூவரது வலது காலில் சுட்டு பிடித்தனர்.
விசாரணையில் பிடிபட்டவர்கள் உத்தரப்பிரதேச மாநிலம் மஜித்புவா பகுதியைச் சேர்ந்த இர்பான்(43), காஜிவாலா பகுதியைச் சேர்ந்த கல்லு ஆரிப்(60), காஜிபூர் பகுதியைச் சேர்ந்த ஆசிப்(45) என தெரிந்தது. மூவரையும் கைது செய்த போலீஸார், அவர்களை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையர் ஆ.சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மூவரும் போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் சுட்டு பிடித்து கைது செய்யப்பட்டனர். இவர்களின் கைரேகை உள்ளிட்ட விவரங்கள் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநில போலீஸாருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கு ஏதாவது வழக்குகளில் இவர்களுக்கு தொடர்பிருக்கிறதா என்பது பின்னர் தெரியவரும்.
துணி வியாபாரம்: இவர்கள் தங்கியிருந்த இடத்தில், ஏற்கெனவே வடமாநிலத்தைச் சேர்ந்த 12 பேர் தங்கி, அலுமினிய பாத்திர வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மூவரும், தீபாவளிக்கு முன்பு இங்கு வந்து தங்கியுள்ளனர். துணி வியாபாரம் செய்ய வந்துள்ளதாக கூறியுள்ளனர். தொடர்ந்து மக்கள் அதிகம் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளை நோட்டமிட்டுள்ளனர். அதன்படி, கவுண்டம்பாளையம் வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். 3 மணி நேரத்தில் 13 வீடுகளில் திருடியுள்ளனர். பிடிபட்ட இவர்கள், பவாரியா கொள்ளைக் கூட்டத்துடன் தொடர்புடையவர்களா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்” என்றார்.