

நாகை மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நிவாரண மையங்களை மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநருமான அண்ணாதுரை நேற்று ஆய்வு செய்தார்.
இதில், நாகை நகராட்சிக்கு உட்பட்ட நாகூர் பங்களா தோட்டம், அம்பேத்கர் நகர் தெற்கு, கீரைக்கொல்லைத் தெரு, அக்கரைக்குளம் ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணிகளை அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்த மக்களை சந்தித்த அண்ணாதுரை, அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளனவா என்பதை பார்வையிட்டார்.
பின்னர், அவர் கூறியபோது, “ மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை தங்கவைப்பதற்கு 11 புயல் பாதுகாப்பு மையங்களும், 6 பல்நோக்கு மையங்களும், 340 அரசு பள்ளி, கல்லூரி கட்டிடங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, தற்காலிகமாக 10 நிவாரண முகாம்களில் 1,129 பேர் தங்கவைக்கப்பட்டு, உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன” என்றார். இந்த ஆய்வின்போது, நாகை நகராட்சி ஆணையர் லீனா சைமன் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, சாலமன் தோட்டம் பகுதி நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள அப்பகுதி பொதுமக்களை ஆட்சியர் ஆகாஷுடன் சென்று சந்தித்து பேசிய கண்காணிப்பு அலுவலர் அண்ணாதுரை, தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தார்.