ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: அமலாக்கத் துறை உதவி இயக்குநர் ஆஜராக உத்தரவு

ஆகாஷ் பாஸ்கரன் (வலது)
ஆகாஷ் பாஸ்கரன் (வலது)
Updated on
1 min read

சென்னை: சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத் துறை உதவி இயக்குநர் விகாஷ் குமார், டிசம்பர் 15-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்களைப் பறிமுதல் செய்தது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.

உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், ஆகாஷ் பாஸ்கரனிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு அதிகாரி நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறி, ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

இதையடுத்து, அமலாக்கத் துறைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நீதிபதி வி.லட்சுமி நாராயணன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், உதவி இயக்குநர் விகாஷ் குமார் ஏன் ஆஜராகவில்லை எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர், ஆஜராவதில் இருந்து விலக்கு உள்ளதாக கூறினார்.

அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகக் கூறியதை அடுத்தே நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டதாகவும், தற்போது அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் ஆஜராகியிருக்க வேண்டுமென தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த அமலாக்கத் துறை வழக்கறிஞர், அடுத்த விசாரணையின் போது கட்டாயம் நேரில் ஆஜராவார் என உறுதி அளித்தார். இதனிடையே, இதே வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட அமலாக்கத் துறை மேல்முறையீட்டு ஆணையத் தலைவர் பிரதீப் குமார் உபாத்தியாயா மற்றும் நிர்வாக பதிவாளர் நஸ்ரின் சித்திக் ஆகியோர் நேரில் ஆஜராக விலக்களிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இருவரும் நேரில் ஆஜராகி தங்களது விளக்கத்தை அளிக்க வேண்டுமெனக் கூறி, விசாரணையை டிச.15-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஆகாஷ் பாஸ்கரன் (வலது)
“வந்தே மாதரம்... எந்த கட்சிக்கும் சொந்தமானது அல்ல!” - மக்களவையில் அகிலேஷ் யாதவ் ஆவேசம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in