

நிர்மல்குமார் |கோப்புப் படம்
மதுரை: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில், அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், மாநகர் காவல் ஆணையர் லோகநாதன், கோயில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் ஆகியோருக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது மூவரும் ஆஜராகி நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்கு வருத்தம் தெரிவித்தனர். பின்னர் தனி நீதிபதியின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு எதிராக மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டில் தனி நீதிபதியின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது திருப்பரங்குன்றம் வழக்கு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு மனுவில் சட்டம் மற்றும் மின்துறை அமைச்சர் நிர்மல்குமாரையும் சேர்த்து பிரதான வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான பரமசிவம் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், அமைச்சர் நிர்மல்குமார், திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். அவர் சமீபத்தில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போது இரண்டு ஆண்டுக்கு முன்பிருந்த நடைமுறையே பின்பற்றப்படும் என தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது.
அப்படியிருக்கும் போது உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முன்பிருந்த நடைமுறையே பின்பற்றப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்திருப்பது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகும். நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அவமதிக்கும் வகையில் அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தைவிட அரசு உயர்ந்தது என்றும் நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு இல்லை என்றும் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்தில் அமைச்சரின் பேச்சு உள்ளது.
இதை அனுமதித்தால் நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழப்பார்கள். எனவே அமைச்சர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.