வணிக காஸ் சிலிண்டர் விநியோக கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்: மத்திய அரசு உத்தரவு

வணிக காஸ் சிலிண்டர் விநியோக கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்: மத்திய அரசு உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு ஆசியாவில் நிலவி வந்த போர் பதற்றம் தணிந்துள்ளதை தொடர்ந்து, வணிக நுகர்வோருக்கான எல்பிஜி எரிவாயு விநியோகத்தின் மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு உடனடியாக நீக்கியுள்ளது. 

இதன் மூலம், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான வணிகப் பயன்பாட்டு எல்பிஜி விநியோகம் மீண்டும் போருக்கு முந்தைய இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

மேற்கு ஆசியாவில் வெடித்த மோதலின் போது, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியதால் அங்கிருந்து வரும் எரிவாயு இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எரிவாயு இறக்குமதியில் சுமார் 90 சதவீதம் மேற்கு ஆசிய நாடுகளைச் சார்ந்தே இருப்பதால், வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தைப் பாதுகாக்க மத்திய அரசு அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

இதன்காரணமாக, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக 70 சதவீதம் வரை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. மேலும், உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க சுத்திகரிப்பு ஆலைகளின் C3-C4 ஹைட்ரோகார்பன் ஓட்டங்களை பெட்ரோகெமிக்கல் தயாரிப்பில் இருந்து எல்பிஜி தயாரிப்புக்கு மத்திய அரசு திருப்பிவிட்டிருந்தது.

தற்போது உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளதாலும், இறக்குமதி செய்யப்படும் எரிவாயு வரத்து சீராகியுள்ளதாலும் இந்த அவசரக்காலக் கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற மத்திய பெட்ரோலிய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, மொத்தமாக எல்பிஜி வாங்கும் பெரிய தொழிற்சாலைகளுக்கான விநியோகம் 50 சதவீதம் வரை தளர்த்தப்பட்டுள்ளது.

அதேவேளையில், பெட்ரோகெமிக்கல் துறைக்கான C3-C4 ஓட்டங்கள் மீண்டும் அதிகரிக்கப்பட்டாலும், நாட்டின் தினசரி உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி 40 டிஎம்டி என்ற அளவிற்குக் குறையாமல் பராமரிக்கப்பட வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு நிபந்தனை விதித்துள்ளது.

மேலும், குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு உள்ள பகுதிகளில் இருக்கும் வணிக நுகர்வோரைத் தொடர்ந்து பிஎன்ஜி முறைக்கே படிப்படியாக மாற்றவும், வணிகப் பயன்பாட்டு நுகர்வோரின் தரவுகளைத் துல்லியமாகப் பராமரிக்கவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறைந்து, கச்சா எண்ணெய் விலையும் போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ள இந்தச் சூழலில், அரசின் இந்த அறிவிப்பு நாட்டின் தொழில் துறை வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

வணிக காஸ் சிலிண்டர் விநியோக கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்: மத்திய அரசு உத்தரவு
பிரேமலதா, சவுமியாவின் துல்லிய பேச்சுகள்! - ஆணாதிக்கம் தோய்ந்த அரசியல் களத்தின் புதிய நம்பிக்கையா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in