

மத்திய அரசின் மானியத்துடன், மாநில அரசின் மானிய அறிவிப்பு காரணமாக சோலார் மின் இணைப்பு பெறுவதற்கான விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், இத்திட்டத்தில் உள்ள பல்வேறு நடைமுறை சிக்கல்களால் இத்திட்டத்தின் பலன் பொதுமக்களை முழுமையாக சென்றடைய முடியாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சூரிய சக்தியை பயன்படுத்தி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் கீழ் ஒரு கிலோ வாட் சூரிய மின்திறன் உற்பத்திக்கு மானியமாக ரூ.30 ஆயிரம், 2 கிலோ வாட்டுக்கு ரூ.60 ஆயிரம், 3 கிலோ வாட் முதல் 10 கிலோ வாட் வரை ரூ.78 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இதேபோல, கடந்த ஆக.5-ம் தேதி முதல் 2017 மார்ச் 31-ம் தேதி வரை பதிவு செய்பவர்களுக்கு ஒரு கிலோ வாட் ரூ.5 ஆயிரம், 2 கிலோ வாட் ரூ.10 ஆயிரம், 3 கிலோ வாட் முதல் 10 கிலோ வாட் வரை ரூ.22 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசும் அறிவித்துள்ளது.
இதனால், இத்திட்டத்தின் கீழ் பலன் பெற பொதுமக்கள் மிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இத்திட்டம் பொதுமக்களை சென்றடைய ஏராளமான தடைகள் உள்ளதாக சமூக ஆர்வலர்களும், மின் நுகர்வோர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: இத்திட்டத்தில் பணிகள் நிறைவுற்ற 7 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் பயனாளியின் வங்கிக் கணக்கில் மானியம் நேரடியாக வரவு வைக்கப்பட்டுவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், விண்ணப்பிக்கும்போது ‘பிஎம் சூர்யகர்’ என்ற மத்திய அரசின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், மாநில அரசின் மானியம் பெற தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் (டிஎன்பிடிசிஎல்) இணையதளத்துடன் இணைக்கவேண்டும். இத்தளத்தின் சர்வர் மிகவும் மெதுவாக செயல்படுவதால் விண்ணப்பங்களை இணைப்பதில் பெரிய சிரமம் ஏற்படுகிறது. இதனால் பயனாளிகள் உரிய காலத்திற்குள் மானியம் பெறுவதில் சிக்கல் உள்ளது.
ஒரு கிலோவாட் சோலார் தகடு அமைப்பதற்கு ரூ.1 லட்சம் செலவாகும் என்றால் மானியமாக ரூ.35 ஆயிரம் கிடைக்கும் என்பதால், சில நிறுவனங்கள் தங்களது தகடு மதிப்பு அதிகம் என்று கூறி ரூ.1.30 ஆயிரம் வரை நுகர்வோரிடம் வசூல் செய்துவிடுகின்றனர்.
இன்னும் சிலர் தங்களுக்கு கீழே ஏராளமானவர்கள் டீலர்கள் என்ற பெயரில் வைத்துள்ளனர். இவர்கள் சோலார் அமைக்க ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேண்டாம் என்று வங்கிக்கடன், மானியத்தை நுகர்வோரிடம் இருந்து முழுமையாக சுருட்டி விட்டு, முழு தொகையையும் கடனாக வாடிக்கையாளர்கள் தலையில் கட்டிவிடுகின்றனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியத்தை முழுமையாக பயனாளிகளை சென்றடைவது இல்லை. எனவே, சோலார் இணைப்பு பெறும் திட்டத்தின் பொதுமக்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
இதுபோன்ற இடர்களை முழுமையாக களைந்தால், 2027-ம் ஆண்டுக்குள் தற்போது வழங்கியுள்ள இணைப்புகளை விட 3 மடங்கு அதிகமான இணைப்புகளை வழங்கமுடியும். பொதுமக்களுக்கு தேவையான தடையில்லா மின்சாரத்தை வழங்குவதுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம்.
திருச்சிக்கு 15,000 இலக்கு
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 2024-27-ம் ஆண்டு வரை சோலார் மின் திட்டத்தின் கீழ் 15,000 இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இதுவரை 4,600 பேர் பயன் பெற்றுள்ளனர். கடந்த ஆக.5-ம் தேதி முதல் 2027 மார்ச் 31-ம் தேதி வரை 3,653 இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இதுவரை 1,020 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 183 இணைப்புகள் வழங்கப்பட்டுவிட்டன.
முதலிடத்தில் சென்னை
சோலார் மின் திட்டத்தில் தமிழக அளவில் 15,255 விண்ணப்பங்கள், 12,426 இணைப்புகளுடன் சென்னை முதலிடத்தில் உள்ளது. 14,627 விண்ணப்பங்கள், 12653 இணைப்புகளுடன் கோவை 2-ம் இடத்திலும், 8,818 விண்ணப்பங்கள், 7,703 இணைப்புகளுடன் செங்கல்பட்டு 3-ம் இடத்திலும், 5,880 விண்ணப்பங்கள், 4,951 இணைப்புகளுடன் ஈரோடு 4-ம் இடத்திலும், 5,847 விண்ணப்பங்கள், 4,782 இணைப்புகளுடன் திருச்சி 5-ம் இடத்திலும் இருக்கிறது.
சேலம், திருப்பூர், திருவள்ளுர், நாமக்கல், மதுரை ஆகியன அடுத்த 5 இடங்களை பெற்றுள்ளன. 491 விண்ணப்பங்கள், 380 இணைப்புகளுடன் பெரம்பலூர் கடைசி இடத்துக்கு முந்தைய இடமும், 364 விண்ணப்பங்கள், 262 இணைப்புகளுடன் அரியலூர் மாவட்டம் கடைசி இடத்திலும் உள்ளன.