

சென்னை: வாடிக்கையாளரின் உரிய அனுமதியின்றி ரூ.13.75 லட்சம் தனிநபர் கடனை உடனடியாக அனுமதித்த வழக்கில், தனியார் வங்கிக்கு ரூ.55,000 அபராதம் விதித்து சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் நிஹ்மத்துல்லா. இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த 2023 பிப்ரவரி 21-ம் தேதி அன்று, மின்கட்டண நிலுவை இருப்பதாக வந்த போலியான குறுஞ்செய்தியை நம்பிய இவரை, மர்ம நபர்கள் ‘ரிமோட் ஆக்ஸஸ்’ செயலியை பதிவிறக்கம் செய்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நபர் உரிய கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத சூழலிலும், அவரது பெயரில் ‘இன்ஸ்டா பர்சனல் லோன்’ வாயிலாக ரூ.13.75 லட்சம் கடன் வங்கியால் உடனடியாக அனுமதிக்கப்பட்டு கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
அடுத்த சில நிமிடங்களிலேயே அதில் ரூ.9.50 லட்சம் மர்ம நபர்களின் பீகார் மற்றும் மேற்கு வங்க கணக்குகளுக்கு மாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டது. எஞ்சிய தொகையான ரூ.4.24 லட்சத்தை வங்கி நிர்வாகமே நிலையான வைப்புத் தொகையாக மாற்றியதோடு, பாதிக்கப்பட்ட நபரிடமே மாதாந்திர தவணை தொகையை செலுத்துமாறு நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நிஹ்மத்துல்லா, சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வங்கிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர் கவிதா கண்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “கடன் விண்ணப்பம், கடன் அனுமதி மற்றும் பணம் வழங்கல் ஆகியவை ஒரே நாளில், ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.
வருமானம் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன் போன்ற உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், வங்கியின் பலவீனமான பாதுகாப்பு அமைப்பால் மோசடி நபர்கள் பயனடைய வழிவகுத்ததற்கு வங்கியின் சேவைக் குறைபாடுதான் காரணம்.
எனவே, நிஹ்மத்துல்லா பெயரிலுள்ள ரூ.13.75 லட்சம் கடன் கணக்கையும், எஞ்சிய பணத்தில் தொடங்கப்பட்ட வைப்புத் தொகையையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என வங்கிக்கு ஆணையம் உத்தரவிட்டது.
நஷ்டஈடு
மேலும், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்டஈடாக ரூ.50 ஆயிரம் மற்றும் வழக்கு செலவாக ரூ.5,000 என மொத்தம் ரூ.55 ஆயிரத்தை 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும். கடன் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட அவரது ‘சிபில்’ மதிப்பீட்டை சீரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.