சென்னை உயர்மட்ட மேம்பாலத்துக்கு சிவாஜி கணேசன் பெயர் சூட்ட காங். கோரிக்கை

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: சென்னை - தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை கட்டப்பட்டு விரைவில் திறக்கப்படவிருக்கும் உயர்மட்ட மேம்பாலத்துக்கு சிவாஜி கணேசன் பெயரைச் சூட்டவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக காங்கிரஸ் கலைப் பிரிவு தலைவரும், நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை தலைவருமான கே.சந்திரசேகரன் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தின் விவரம்: ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் தமிழ்த் திரையுலகின் தூணாக, தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழ்ந்தவர். அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவில் தன் தனிச் சிறப்பு வாய்ந்த நடிப்பின் மூலம் சுதந்திரப் போராட்ட வீரர்கள், தேசத் தலைவர்கள் ஆகியோரை எதிர்காலத் தலைமுறையினருக்குக் கொண்டு சென்ற மாபெரும் கலைஞன்.

தற்போது சென்னை, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை கட்டப்பட்டு விரைவில் திறக்கப்படவிருக்கும் உயர்மட்ட மேம்பாலத்துக்கு ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பெயரைச் சூட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தன் கலைத்திறனால் தமிழினத்துக்கு பெருமை சேர்த்தவரும், பெருந்தலைவர் காமராஜரின் சீடரும், காங்கிரஸ் கட்சியின் தூணாகத் திகழ்ந்தவரும், கலைஞரின் நண்பராகத் திகழ்ந்தவருமான ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன், தன் குடும்பத்தினருடன் இறுதிக்காலம் வரை வாழ்ந்த இடம், சென்னை, தேனாம்பேட்டை சந்திப்பு அருகிலுள்ள தெற்கு போக் சாலை என்று முன்பு அழைக்கப்பட்டு, தற்போது செவாலியே சிவாஜி கணேசன் சாலை என்று அழைக்கப்படும் இடத்திலுள்ள அன்னை இல்லத்தில்தான். எனவே, சிவாஜி கணேசன் வசித்த இல்லத்துக்கு அருகில் கட்டப்பட்டுவரும் பாலத்துக்கு அவருடைய பெயர் சூட்டப்படுவது சாலப்பொருத்தமாக இருக்கும்.

தியாகிகள், கலைஞர்கள் என்று அனைவருக்கும் நினைவிடம், சிலை என்று அமைத்து, அவர்களைப் போற்றிடும் தாங்கள், சென்னை, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை கட்டப்பட்டு விரைவில் திறக்கப்படவிருக்கும் உயர்மட்ட மேம்பாலத்துக்கு, ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் பெயரைச் சூட்டி பெருமைப்படுத்த வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சார்பிலும், தமிழக காங்கிரஸ் கலைப் பிரிவு சார்பிலும் கேட்டுக்கொள்கிறோம்.

எங்களுடைய கோரிக்கையை தாங்கள் ஏற்று, பெயர் சூட்ட நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்’ என்று என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
அகமதாபாத் விபத்து முதல் டெல்லி குண்டுவெடிப்பு வரை: இந்தியா 2025 - ஒரு விரைவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in