

அகமதாபாத் விபத்து: ஜுன் 12, மதியம் 1.39 மணிக்கு அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா 171’ விமானம் 32 நொடிகளில் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 242 பேரில் ஒருவர் மட்டும் உயிர்பிழைத்தார். பி.ஜே. மருத்துவக் கல்லூரிக் கட்டிடத்தில் விமானம் மோதியதில் 19 பேர் உயிரிழந்தனர்.
வக்ஃபு திருத்த மசோதா 2025: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரியத் திருத்த மசோதா 2025, குடியரசுத்தலைவரின் ஒப்புதலோடு ஏப்ரல் 8 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. வக்ஃபு சொத்துகளை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மையையும் வாரியத்தின் செயல்திறன் முறைப்படுத்துதலையும் இது முன்னிறுத்துகிறது.
அதிரவைத்த ஆபரேஷன் சிந்தூர்: ஏப்ரல் 22இல் காஷ்மீரின் பஹல்காமில் ‘தி ரெசிஸ்டென்ஸ் பிரன்ட்’ தீவிரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு எதிர்வினையாக மே 7இல் இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்கள், 72 ராணுவ நிலைகள் அழிக்கப்பட்டன.
மிக உயரமான ரயில் வளைவுப்பாலம்: ஜம்மு காஷ்மீரில் செனாஃப் நதியின் குறுக்கே உதம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுல்லா ரயில் வழித்தடத் திட்டத்தின் கீழ், நாட்டின் மிக உயரமான ரயில் வளைவுப்பாலம் கட்டப்பட்டது. இதன் உயரம் 359 மீ. நீளம் 1,315 மீ.
அச்சுறுத்திய கூட்ட நெரிசல்: உத்தரப் பிரதேசக் கும்பமேளாவில் ஜனவரி 29 அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் உயிரிழந்தனர். ஐபிஎல் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் அணியினரை வரவேற்கும் விதமாக பெங்களூருவில் ஜுன் 4இல் நடைபெற்ற நிகழ்வில் நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரோவின் சாதனை: ஜூலை 30இல் நாசா - இஸ்ரோ இணைந்து ஏவிய ‘நிசார்’ செயற்கைக்கோள் ‘எல்’, ‘எஸ்’ என இரண்டு பேண்ட்களில் இயங்கவல்லது. ககன்யான் திட்டம் தொடர்பான சி.இ.20 கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை, பாராசூட் ஏர் டிராப் சோதனை ஆகியவையும் இந்த ஆண்டு இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிகளில் சில.
ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்: சத்தீஸ்கரில் நக்சல் ஊடுரு வலை ஒழிக்கும் வகையில், மே 14 அன்று ‘ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்’ செயல்படுத்தப்பட்டது. அதற்கடுத்த வாரம் சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் உள்ள காரேகுட்டலுவில் 31 மாவோயிஸ்ட்கள் பாதுகாப்புப்படையினரால் கொல்லப்பட்டனர்.
விமானங்கள் ரத்து: டிசம்பர் 2இல் இண்டிகோ விமானங்களின் தாமதம், ரத்து பிரச்சினை தலைதூக்கியது. அடுத்த பத்து நாள்களில் சுமார் 4,500 விமானங்கள் நாடு முழுவதும் ரத்தாகின. இண்டிகோ நிர்வாகம், விமானிகளின் பணி நேர வரம்பு விதி மாற்றங்களைச் செயல்படுத்தாதது காரணமாகச் சொல்லப்பட்டது.
டெல்லி குண்டுவெடிப்பு: நவம்பர் 10 மாலை டெல்லி செங்கோட்டை அருகேயுள்ள சாலையில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 15 பேர் பலியாகினர். இது தொடர்பாகத் தேசியப் புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டுள்ளது.
ஜிஎஸ்டி சீர்திருத்தம்: செப்டம்பர் 3இல் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு 5%, 18% என இரண்டு வகைகளாக மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். செப்டம்பர் 22 இல் இது அமலானது.