

| படம்: ம.பிரபு |
சென்னை: சிபிஐ இயக்குநரின் பதவி நீட்டிப்பு மற்றும் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய பாஜக அரசின் போக்கைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, மத்திய அரசு ஜனநாயக விரோதச் செயல்களில் ஈடுபடுவதாகக் கடுமையாகச் சாடினார்.
சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கியதைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்து மாநில அரசே தேர்வுகளை நடத்த அனுமதி மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்றன.
அதன் ஒருபகுதியாக, சென்னை தண்டையார் பேட்டை அஞ்சல் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை பேசியதாவது: “பாஜக அரசு தொடர்ந்து சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டுக்கு மீண்டும் மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்குவது எந்த விதத்தில் நியாயம்? ‘நாட்டிற்கு எது நல்லதோ அதைச் செய்யுங்கள்’ என நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், பாஜக அரசு எதையும் செவிமடுத்துக் கேட்பதாக இல்லை; தன்னிச்சையாகச் செயல்பட்டு வருகிறது. மறுபுறம், நீட் தேர்வால் நம் நாட்டுப் பிள்ளைகள் தற்கொலை செய்துகொள்ளும் அவலம் தொடர்கிறது. மத்திய அரசு சொல்வதை நம்பித் தேர்வு எழுதிவிட்டு வரும் மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
ஒருபுறம் வினாத்தாள்கள் கசிந்து விற்பனை செய்யப்படுகின்றன, மறுபுறம் வேண்டியவர்களுக்குத் தாராளமாக வழங்கப்படுகின்றன.
இத்தகைய முறைகேடுகளால்தான் மாணவர்கள் மனமுடைந்து தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். மோடி அரசு இனியாவது தனது பிடிவாதப் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “5 மாநில தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலையை பிரதமர் உயர்த்துவார் என நாங்கள் ஏற்கெனவே தெரிவித்தோம். அதைத்தான் இப்போது அவர் செய்திருக்கிறார்” என்றார்.