

தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்
தமிழக காங்கிரசில் சமீபத்தில் புதிதாக 71 மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அவசர ஆலோசனை நடத்தினர்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டத் தலைவர்கள் கட்சியில் உள்ள குறைபாடுகளையும், கூட்டணி கட்சியான திமுக மீதான அதிருப்தியையும் கொட்டித் தீர்த்துள்ளனர்.
குறிப்பாக திமுக தொடர்ந்து காங்கிரசை அலட்சியப்படுத்துகிறது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு நாம் தயாராக இருந்தும், அவர்கள் இன்னும் குழு அமைக்கவில்லை. கடந்த முறை 25 தொகுதிகள்தான் கொடுத்தார்கள். இந்தமுறை மேலும் குறைப்பதாக சொல்கிறார்கள். அப்படி செய்தால் நாம் எப்படி வளர முடியும். எனவே, வரும் தேர்தலில் காங்கிரஸுக்கு கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென மாவட்டத் தலைவர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதை கேட்டறிந்த ராகுல் காந்தி, ‘கூட்டணி விவகாரங்களை மேலிடம் கவனித்துக் கொள்ளும். அதேநேரம் கட்சிப் பணிகளில் சமரசம் செய்ய முடியாது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பூத் கமிட்டிகள் பலவீனமாக உள்ளன. அவற்றை உடனடியாக சரிசெய்யுங்கள். சரியாக வேலை செய்யாவிட்டால் 90 நாட்களில் உங்கள் பதவி பறிக்கப்படும்’என கறாராக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக காங்கிரஸ் தரப்பில் கடந்த நவம்பர் மாதமே குழுவை அறிவித்துவிட்டோம். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு கேட்டுக்கொண்டோம். ஆனால், 70 நாட்கள் கடந்தும் திமுக தரப்பில் இன்னும் குழு அமைக்கப்படவில்லை. இருப்பினும், ஒருமித்த கருத்துடன் சுமுகமான முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.
எங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எவை என்பது முன்கூட்டியே தெரிந்தால்தான், அங்கு வெற்றியை உறுதி செய்வதற்கான களப்பணிகளை திட்டமிட்டுத் தொடங்க முடியும். திமுக இன்னும் பேச்சுவார்த்தைக் குழுவை அறிவிக்காதது எங்களது தொண்டர்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. குழு எப்போது அமையும் என அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் மிகக் குறுகிய காலமே உள்ள நிலையில், திமுக ஏன் இன்னும் குழு அமைக்கவில்லை எனத் தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காங். தலைமைக்கு வருத்தம்: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், “தேர்தல் பணிகளை துரிதப்படுத்த உடனடியாக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை நியமிக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் முழுவீச்சில் தேர்தல் களத்திற்குச் செல்ல முடியும். கடைசி நேரத்தில் குழுவை அமைப்பது தேவையற்ற குழப்பங்களுக்கு மட்டுமே வழிவகுக்கும். அதனால்தான் இப்போதே குழுவை அமைக்க வலியுறுத்துகிறோம்.
திமுக இன்னும் பேச்சுவார்த்தை குழுவை அமைக்காததில் எங்களது தேசிய தலைமைக்கு வருத்தமுள்ளது. எங்களது தலைவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களைத் தமிழக முதல்வரை நேரில் சந்தித்துத் தெளிவுபடுத்துவோம். ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் தமிழகத்துக்கு வருவதற்குத் தயாராகவே உள்ளனர். ஆனால், பேச்சுவார்த்தை குழு இன்னும் அமையாததால்தான் அவர்கள் வருகை தள்ளிப்போகிறது”என்றார்