நமச்சிவாயத்தை எதிர்த்து களமிறங்கும் வைத்திலிங்கம்!
கடந்த 2016 சட்டப் பேரவைத் தேர்தலின் போது புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தார் நமச்சிவாயம். அப்போது அவரை முன்னிலைப்படுத்தியே காங்கிரஸ் பரப்புரை மேற்கொண்டது. ஆனால், தேர்தல் வெற்றிக்குப் பிறகு அவரை முதலமைச்சர் ஆக்காமல் தேர்தலில் போட்டியே போடாத நாராயணசாமியை திடீர் முதல்வராக்கியது காங்கிரஸ் தலைமை.
இதனால் அதிருப்தியில் இருந்த நமச்சிவாயம், கடந்த 2021-ல் பாஜக-வில் இணைந்தார். அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளுமளவுக்கு அவருக்கு அதிமுக்கியத்துவம் அளித்த பாஜக, 2024 மக்களவைத் தேர்தலில் அவரையே வேட்பாளராகவும் நிறுத்தியது. ஆனால், காங்கிரஸ் வேட்பாளரும் மாநிலத் தலைவருமான வைத்திலிங்கத்திடம் தோற்றுப் போனார் நமச்சிவாயம். ஆனாலும் அவருக்கான முக்கியத்துவத்தைக் குறைக்காமல் அவரை அமைச்சராகத் தொடர அனுமதித்திருக்கிறது பாஜக.
இந்த நிலையில், வரும் தேர்தலில் மீண்டும் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடும் பிளானுடன் அங்கு வீடு கட்டி குடிபெயர்ந்திருக்கிறார் நமச்சிவாயம். இந்தச் சூழலில், மக்களவைத் தேர்தலில் நமச்சிவாயத்தைத் தோற்கடித்த வைத்திலிங்கம், இப்போது சட்டப் பேரவைத் தேர்தலிலும் மண்ணாடிப்பட்டு தொகுதியில் அவரை எதிர்க்க ஆயத்தமாகி வருகிறார். தனது எம்பி பதவிக்காலம் இன்னும் மூன்றாண்டுகள் பாக்கி இருந்தபோதும் முதல்வர் இருக்கையில் அமர்ந்துவிட வேண்டும் என்ற ஆசையில் வைத்திக்கு இப்படியொரு ஆசை வந்திருக்கிறது. அவரை மண்ணாடிப்பட்டில் களமிறக்க அவரது ஆதரவாளர்கள் இப்போதே சுறுசுறுப்பாக வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இதுபற்றி வைத்திலிங்கத்திடம் கேட்டதற்கு, “கட்சித் தலைமை அனுமதித்தால் மண்ணாடிப்பட்டில் போட்டியிடுவேன்” என்று மட்டும் சொன்னார். இந்தத் தொகுதியில் கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.குமார், பாஜக-வின் நமச்சிவாயத்திடம் தோற்றுப் போனார். கடந்த 2011, 2016 தேர்தல்களில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் டி.பி.ஆர்.செல்வம் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொகுதியை இம்முறையும் நமச்சிவாயத்துக்கே கொடுத்து விடுவார்கள் என்பதால் டி.பி.ஆர்.செல்வம் காங்கிரஸ் கட்சியில் சேர முடிவெடுத்து அக்கட்சியின் நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வருகிறார்.
மண்ணாடிப்பட்டை எதிர்பார்த்தே டி.பி.ஆர்.செல்வம் உள்ளே வருகிறார் என்பதால் இவரது வருகையை விரும்பாத காங்கிரஸார், ‘மண்ணாடிப்பட்டு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம்’ என்று தொகுதிக்குள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இந்த குழப்பங்களுக்கு மத்தியில், “நாங்கள் கடந்த முறை போட்டியிட்ட (மண்ணாடிப்பட்டு உள்பட) தொகுதிகளை விட்டுத் தரமாட்டோம்” என்று கன்டிஷன் போட்டு வருகிறது திமுக.
இதுபற்றி அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, “மண்ணாடிப்பட்டு தொகுதியில் மக்கள் முடிவு செய்தால் மட்டுமே என்னை தோற்கடிக்க முடியும். நாராயணசாமியோ, வைத்திலிங்கமோ யார் நினைத்தாலும் அது நடக்காது" என்றார்.
அதேசமயம், எம்.பி. பதவிக் காலம் இன்னும் பாக்கி இருக்கையில் வைத்திலிங்கத்தை எதற்காக சட்டப் பேரவைத் தேர்தலில் நிறுத்தி விஷப்பரீட்சை செய்ய வேண்டும்? அதற்குப் பதிலாக கட்சியில் வேறு யாருக்காவது வாய்ப்புக் கொடுக்கலாமே” என்று காங்கிரஸுக்குள் இருக்கும் வைத்திக்கு எதிரான கலகக்காரர்கள் வார்த்தைகளை விடுகிறார்கள்.
புதுமைகளை விரும்பும் புதுச்சேரி அரசியல் களம் இதற்கெல்லாம் என்ன பதிலை வைத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
