

சென்னை: ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கைக் குழு (ஆக்டோ-ஜியோ) மாநில தலைமை அமைப்பாளர் இரா.பாலசுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு ஜன.3-ம் தேதி அறிவித்தது. அதை ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு வரவேற்ற நிலையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உடன்பாடு இல்லாத அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்கள் இணைந்து ஆக்டோ-ஜியோ என்ற புதிய கூட்டமைப்பை உருவாக்கி கோரிக்கைகளுக்காக போராடி வருகிறோம்.
அரசு ஊழியர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள சிபிஎஸ் திட்டத்தில் ஏறத்தாழ ஆறேகால் லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களிடமிருந்து கடந்த 22 ஆண்டுகளில் ரூ.80 ஆயிரம் கோடி பங்களிப்புத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு எல்ஐசியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களிடமிருந்து மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து அரசு ஓய்வூதியம் தருவதற்கு அரசு ஊழியர்கள் தாங்களாகவே ஓய்வூதியத் திட்டத்தில் தொகையை செலுத்தி ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளலாமே, அதற்கு அரசு எதற்கு?
தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நான்கரை லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பிப்.3 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதற்கான ஆயத்த மாநாடு மாவட்டத் தலைநகரங்களில் சனிக்கிழமை (இன்று) நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.