திருவள்ளுவர், பெரியாரை முன்னிறுத்தி பேச்சு - ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில் தமிழர்களை கவர ராகுல் முயற்சி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

Updated on: 
2 min read

சென்னை: மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, முதன்முறையாக திருவள்ளுவர், பெரியார் ஆகியோரை முன்னிறுத்திப் பேசினார். அவர் சென்னையில் நடத்திய ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில் இடம்பெற்ற இந்தப் பேச்சு தமிழர்களைக் கவரும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

கல்வி முறை மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான இளைஞர்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டு, அவற்றை பொது விவாதத்துக்கு கொண்டு வருவதே ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியின் நோக்கமாகும். அந்த வகையில், நேற்று சென்னையிலும் ராகுல், ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுடன் பல்வேறு கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தினரின் எண்ணிக்கையால் தீவுத்திடல் அரங்கம் நிரம்பி இருந்தது.

இந்நிகழ்ச்சி மேடையின் திரையில் பெரியார் மற்றும் திருவள்ளுவர் ஆகியோரின் பெரிய அளவிலான டிஜிட்டல் படங்கள் இடம்பெற்றிருந்தன. இவர்களை தமிழகத்தின் இரு பெரும் ஆளுமைகள் என ராகுல் தனது உரையில் குறிப்பிட்டார். இத்துடன் பிரதமர் நரேந்திர மோடியையும் அவரது ஆட்சியையும் ராகுல் விமர்சித்தார்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் பேசிய ராகுல் கூறுகையில், “மாணவர் என்றால் அதன் அர்த்தம் என்ன? அதன் சாரம் என்ன? எனக் கேட்டால் இரண்டு பெரிய ஆளுமைகளைப் பார்க்கிறோம். இந்த இருவரும் சொன்னது என்னவெனில், யார் எதைக் கூறினாலும் ஏன்? எதற்கு? எனக் கேள்விகளை எழுப்பி அதன் மீது ஆராய்வது அவசியம்” என பெரியார் கூறியுள்ளார்.

கேள்வி கேட்பதுதான் ஒரு மாணவரின் அடிப்படை உரிமை. அதேபோல், ஒரு ஊற்றை எவ்வளவு ஆழமாகத் தோண்டுகிறோமோ அவ்வளவு அதிகமான நீர் வரும். அதைப்போல் அதிகமாகக் கற்றலினால் அதிகமான அறிவு வளரும் எனத் திருவள்ளுவர் கூறியுள்ளார்’ எனத் ‘தொட்டனைத் தூறும்..’ குறளின் விளக்கத்தை அளித்தார்.

\திருவள்ளுவரை முன்னிறுத்தி மேடைகளில் பேசிய முதல் வட மாநிலங்களின் தேசியத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி அறியப்படுகிறார். பிரதமர் மோடி இந்தியாவில் மட்டும் அன்றி சர்வதேசப் பயணம் செல்லும் பல நாடுகளின் மேடைகளிலும் திருவள்ளுவரை புகழ்ந்து பேசி வருகிறார்.

அந்த வரிசையில், முதன்முறையாக திருவள்ளுவரை குறிப்பிடும் ராகுல், அவருடன் பெரியாரையும் சேர்த்துக் கொண்டுள்ளார். அதேபோல், மேடையில் ராகுல் முன்பாகப் பேசிய மாணவர்கள் தமிழிலேயே பேசினர். இவர்களில் பலருக்கு ஆங்கிலம் தெரிந்தும் அரசியல் காரணமாக அவர்களைத் தமிழில் பேசக் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.

தமிழில் பேசியவர்களின் மொழிபெயர்ப்பை கார்த்திகா என்ற பெண், ராகுலுக்கு மொழிபெயர்த்தார். இதைக் கேட்டு ராகுல் தன் பதிலாகவும், கருத்தாகவும் ஆங்கிலத்தில் பேசினார். எந்த இடத்திலும் இந்தியைப் பயன்படுத்தவில்லை. அதேபோல், தான் பல மேடைகளில் மத்திய அரசுக்கு எதிராக முன்வைத்த கருத்துகளையே இங்கும் ராகுல் முன்வைத்துப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தனது கருத்தாக ராகுல் பேசியதாவது: உங்களை ஆள்பவர்கள், வழிநடத்துபவர்களை கேள்வி கேட்கும் உரிமையை இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் அளிக்கிறது. வாக்கு திருட்டு என்பது உங்கள் மொழி, கலாச்சாரம், நாடு, ஜனநாயகம் மீதான தாக்குதல் ஆகும்.

திரையில் இங்கு காட்டிய நாடாளுமன்றக் காட்சிப் பதிவில் அமித் ஷா இந்தி கட்டாயம் எனக் கூறுகிறார். இது உங்களுடைய மொழி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, வரலாறு ஆகியவற்றின் மீதானத் தாக்குதல் ஆகும். அவர்களுடய மொழியும், கலாச்சாரமும் முதல் தரம் எனவும் உங்களது மொழி இரண்டாம் தரம் என்றும் வெளிப்படையாகக் பேசுகின்றனர்.

இதுபோல், மோடியும், அமித் ஷாவும் உங்கள் அடிப்படைகளை எப்படி அழிக்கிறார்கள் எனப் பாருங்கள். கடந்த 15 ஆண்டுகளாக நடத்தும் தனது ஆட்டமும், நாடகமும் முடிந்துவிட்டது என்பதை மோடி உணரவில்லை. இதற்காக, மோடி, அமித் ஷா, தோவல், மோகன் பாகவத் அனைவரையும் எதிர்க்கட்சிகளாகிய நாம் சூழ்ந்து கொண்டோம்.

மோடி தான் செய்த குற்றங்களுக்காக இந்த நாட்டிற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். யாராக இருந்தாலும் அனைவரையும் நாம் நீதியின் முன் நிறுத்துவோம். இவ்வாறு பேசியவர், இறுதியில் மேடையிலிருந்தபடியே அனைவருடனும் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

‘மாணவர்களின் குரல்’ எனும் பெயரில், அனைத்து மாநிலங்களின் மாணவர்களையும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி சந்தித்து வருகிறார். இந்நிகழ்வில் அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதுடன், தனது கருத்துகளையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ராகுல், ராஜஸ்தானின் கோட்டா, மகாராஷ்டிராவின் புனே மற்றும் நாசிக், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் ஆகிய நகரங்களில் தன் நிகழ்ச்சியை நடத்தி உள்ளார்.

<div class="paragraphs"><p>மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி</p></div>
சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே, நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா விடுவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in