

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்
சென்னை: திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் கட்சி உள்ளது. கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2-ம் கட்ட தலைவர்கள் தெரிவிக்கும் கருத்து தனிப்பட்டதாகும். அது காங்கிரஸ் கட்சியின் கருத்தல்ல என்று சென்னையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் தெரிவித்து வரும் கருத்தால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் கூட்டணி பற்றி யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என ராகுல் காந்தி, கார்கே மற்றும் வேணுகோபால் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அவர்களை விட யாரும் பெரியவர்கள் இருக்கிறார்களா என எனக்கு தெரியவில்லை. அகில இந்திய காங்கிரஸ் காட்டும் வழியில் செயல்படுபவன் நான். இத்தனை காலம் பேசாமல் தேர்தல் நேரத்தில் ஆட்சியில் பங்கு என்ற கருத்தை பேசுவது ஏன்? இப்படி பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
இந்த சூழலில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கே.சி.வேணுகோபாலிடம் திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்தார். “திமுக எங்கள் பழைய கூட்டாளி. பாசிச சக்திகளுக்கு எதிராக இரண்டு கட்சிகளும் இணைந்து தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றன.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. கூட்டணி குறித்த தெளிவான பேச்சுவார்த்தை தேவை. அது அவசியமானது. நாங்கள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். அது எப்போது தொடங்கும் என்பதை திமுக அறிவிக்கும். எங்களது அரசியல் கட்சியில் உள்ளவர்களுக்கும் லட்சியங்கள் உள்ளன.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த விவகாரத்தை பொறுத்தவரை அது தனிநபர்கள் சொன்ன கருத்தாகும். அது காங்கிரஸ் கட்சியின் கருத்தல்ல. கூட்டணி குறித்த இறுதி முடிவை காங்கிரஸ் கட்சியின் தலைமைதான் எடுக்கும். அந்த முடிவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அடங்கியவர்கள் தான் எடுப்பார்கள். பொதுவெளியில் கூட்டணி குறித்து பேச யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்தார்.