

எம்.பி மாணிக்கம் தாகூர்
மதுரை: திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச குழு அமைத்து 36 நாட்களாக காத்திருக்கிறோம் என, விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறினார்.
மதுரை திருநகரிலுள்ள முகாம் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;
நாடளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச, பாஜக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கிறது. ராகுல் காந்தி மட்டுமின்றி மொத்த எதிர்கட்சி உறுப்பினர்களையும் பேச அனுமதிக்கவில்லை. வேறு வழியின்றி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் போராடினோம்.
இதற்காக நான், மதுரை எம்பி சு. வெங்கடேசன் உட்பட 8 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டோம். எங்களது போராட்டம் அவைக்கு வெளியில் தொடர்கிறது. இது போன்ற செயலை மத்திய அரசு கைவிடவேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு உரிமை தரவேண்டும். எதிர்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்க ஆளும்கட்சி பதிலளிக்க வேண்டும்.
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக 5 பேர் கொண்டு காங்கிரஸ் குழு டிச.3-ல் அமைக்கப்பட்டது. திமுகவுக்காக 36 நாட்களாக காத்திருக்கிறோம். திமுக குழு அமைத்து அழைக்கும்போது பேசத் தயாராக உள்ளோம். நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். தோழமையை மதித்து காத்திருக்கிறோம். திமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. கூட்டணி வலுவாக இருக்கும் என, நம்புகிறோம். எங்களுக்கு உரிய மரியாதை தரவேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை 39 முக்கிய தலைவர்களை அழைத்து தனித்தனி கருத்துக் கேட்டது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு மரியாதை மிக அவசியம் என்பதை தெளிவுபடுத்தினோம். இது குறித்து தகவல் உரியவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கும். கட்சி தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடப்போம்.
மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையிலான கூட்டணி சீமானுடன் போட்டி போடுகிறது. அதிமுக 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதில் மோடியும் உள்ளார்.
ஏற்கெனவே ‘எப்ஸ்டீன்’ கோப்புகளுக்காக முதல் இரண்டு நாள் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். இந்த கோப்புகளைப் பொறுத்தவரையில் அனில் அம்பானி, மத்திய பெட்ரோல் துறை அமைச்சர் - பிரதமர் மோடிக்கான தொடர்பு இருக்கிறது.
இந்திய விவசாயிகளை அமெரிக்காவிடம் மோடி அடகு வைத்துவிட்டார். 500-க்கும் மேற்பட்ட அமெரிக்க பொருட்கள் இந்தியாவில் வந்து குவியப் போகின்றன.
நாளை அவை தொடங்கியதும் பட்ஜெட் விவாதம் தொடர வேண்டும். மோடி நாடாளுமன்ற அவைக்கு வரவே பயப்படுகிறார். மக்களவைக்கு அவர் வந்து பேசுவதற்கும் பயப்படுகிறார். தனது கட்சிக்காரர்களை வைத்து மட்டுமே பேசுகிறார். எப்ஸ்டீன் பைல் விவகாரத்தில் அனில் அம்பானி, மோடிக்குமான தொடர்புகள் இருப்பது ஊரறிந்த விஷம். இதில் பல்வேறு தகவல்கள் வெளியே வந்துவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியை தொடர்ந்து கண்காணிகிறோம். கட்டிடம் முழுமையாக முடியாத நிலை உள்ளது. மதுரை எய்ம்ஸ் என்பது ராமநாதபுரத்தில் நடக்கக்கூடாது. மதுரையில் செயல்படவேண்டும். முழு கட்டுமானப் பணிகளும் முடிந்து திறக்க வேண்டும். மதுரை எய்ம்ஸை எப்போது திறக்க போக்கிறார் என, மோடி தமிழகம் வந்து சொல்லவேண்டும்.
தமிழக ரயில்வே திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. மதுரை- தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை சொல்ல மறுக்கின்றனர். மதுரை மெட்ரோ ரயில் உள்ளிட்ட தமிழகத்திற்கான திட்டங்களை எப்போது முடித்து கொடுக்க போகிறோம் என்பதை மாதம் தேதியை குறிப்பிட்டு மத்திய அரசு சொல்லவேண்டும்.
பிற மாநிலங்களை முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தமிழகம், குறிப்பாக மதுரையை வஞ்சிக்கிறது. மத்திய அரசு. கடந்த 2 ஆண்டுக்கு முன்பே எய்ம்ஸ் கட்டுமான பணி 80 சதவீதம் முடிந்தது என, அமைச்சர் ஜேபி.நட்டா சொல்லிவிட்டு சென்றார். என்ன ஆனது. இன்னும் முடிக்காத கட்டிடங்களை வைத்து கொண்டு மத்திய அரசு கதை சொல்கிறது.
அரசு வேலைக்கான போட்டி தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது கண்டித்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.