

சென்னை: “காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல, தமிழக மக்களின் உரிமையை பறிக்கும் செயலாகும்,” என்று காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் கூறியுள்ளார்.
தமிழக அரசின் 17வது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று ஆளுநரின் உரையுடன் தொடங்கியது. இதில், இருமொழி கொள்கை, மேகேதாட்டு அணை எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று இருந்தன.
இதனிடையே, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் விஜய் தீர்மானம் கொண்டுவந்தார். இதற்கு அவையில் இருந்த அனைத்து கட்சிகள் தங்களை ஆதரவை பதிவு செய்தனர். பின்னர் இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, தவெக அரசின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் ராஜேஷ் குமார் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினார்.
அவர் பேசுகையில், “முதல்வர் விஜய் முன்மொழிந்துள்ள தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. காவிரி என்பது ஒரு நதி மட்டுமல்ல, தமிழக விவசாயிகளின் உயிர்நாடி. அதனை நம்பித்தான் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கை உள்ளது.
காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மதிக்காமல், தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல் காவிரி நடுவே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல, தமிழக மக்களின் உரிமையைப் பறிக்கும் செயலாகும்.
காவிரி நீர் வழங்குவது குறித்து நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி, ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி தண்ணீரை மூன்று வழித் தடங்களில் கர்நாடக அரசு வழங்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு வரும் நீரைத் தடுத்து மேகேதாட்டு அணை கட்டுவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். தமிழ்நாட்டின் பல பகுதிகளும் பாதிக்கும். கர்நாடக அரசின் ஒருதலைபட்சமான நடவடிக்கையை காங்கிரஸ் கண்டிக்கிறது" என்று அமைச்சர் ராஜேஷ் குமார் கூறியுள்ளார்.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் தலைமையிலான அரசு தான் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் தவெக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் தனது கட்சி ஆட்சியில் உள்ள மாநில அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.