“பழனிசாமிக்கு இருப்பது அறியாமையா, அச்சமா?” - தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் ப.சிதம்பரம் சந்தேகம்

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

Updated on
1 min read

காரைக்குடி: “தொகுதி மறுசீரமைப்பு மசோதா விவகாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பது அறியாமையா, அச்சமா என்று தெரியவில்லை” என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தற்போது இருக்கும் 543 மக்களவைத் தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு (181 இடங்கள்) மகளிருக்கு என்று கடந்த 2023 செப்டம்பரிலேயே 106-வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை 30 மாதங்களுக்கு பிறகு தற்போது அமல்படுத்தியுள்ளனர். இதன்மூலம் பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

தற்போது 543 தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு என்பதற்குப் பதிலாக 850 தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு என்று பாஜக புது கரடியை விடுகிறது. இது ஒரு மாயைதான். அரசியல் சாசனம் 81 பிரிவின்படி மக்கள்தொகை அடிப்படையில்தான் தொகுதிகளை மறுவரையறை செய்ய முடியும். எந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுத்துக்கொள்வது என்பதை அரசே தீர்மானிக்கும்.

அதன்படி, அவர்கள் 2011 அல்லது 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தான் முடிவு செய்வர். தமிழகத்தில் 39-லிருந்து 59-ஆக உயரும் என்கின்றனர். மறுசீரமைப்பு செய்தால் 47-ஆக குறையும். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் 80-லிருந்து 120 ஆக உயரும் என்கின்றனர். மறுசீரமைப்பு செய்தால் 137 அல்லது 140 ஆக உயரும்.

ஆனால், அதைச் சொல்லாமல் பிரதமர், உள்துறை அமைச்சர் உண்மையை மறைக்கின்றனர். மறுசீரமைப்புக்குப் பின்னர் என்ன நடக்கும் என்பதை மறைத்து, பாதி உண்மையை மட்டுமே சொல்கின்றனர். அதனால்தான், இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் எதிர்க்கின்றனர்.

எதிர்க்கும் எம்பிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மசோதா நிறைவேறாது. நான் கூறும் கணக்குக்கு யாராவது எதிர் கணக்கு இருந்தால் கூறலாம். மேலும் இந்த விஷயத்தில் பழனிசாமிக்கு இருப்பது அறியாமையா? அச்சமா? என்று தெரியவில்லை. சட்டத்தைப் படித்துப் பார்த்து பழனிசாமி கருத்துச் சொல்லவில்லை. அவரது கருத்தைச் சொல்லச் சொன்னால், அமித்ஷா கருத்தைச் சொல்கிறார்.

எங்களது குரலை விஜய் ஒலித்ததற்குக்கு நன்றி சொல்கிறேன். மசோதாவைத் திரும்பப் பெற்றால் நாங்கள் பிரதமருக்கு பொதுவெளியில் நன்றி சொல்வோம்” என்றார் ப.சிதம்பரம்.

<div class="paragraphs"><p>ப.சிதம்பரம் </p></div>
காங்., திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜக சாடல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in