

புதுச்சேரி: ராகுல் காந்தி பிரதமரானதும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மல்லிகார்ஜூன கார்கே வாக்குறுதி அளித்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். பின்னர் வேட்பாளர்களுக்கு தேர்தலில் தரும் வாக்குறுதி அட்டைகளை தந்தார். அதன்பிறகு அந்த வாக்குறுதிகளை மல்லிகார்ஜூன கார்கே அறிவித்தார். அதில் 3 வாக்குறுதிகள் மட்டும் இடம் பெற்றிருந்தன.
அதன் விவரம்: வரும் 2026-ல் காங்கிரஸ் ஆட்சியில் தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவச கல்வி அனைவருக்கும் தரப்படும். ஆட்சிக்கு வந்தவுடன் கட்டாயக் கல்வித் திட்டத்தை நிறைவேற்றுவோம். இதுவே எங்கள் முதல் கையெழுத்தாக இருக்கும். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.2,000 கல்வி உதவித்தொகை தரப்படும்.
மாதந்தோறும் ரூ.2,500 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் அனைத்து குடும்பத்துக்கும் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும். இந்த மளிகைப் பொருட்களை வீடு தேடி வந்து தரவும் நடவடிக்கை எடுப்போம். தங்கம் விலை உயர்வால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருமணமான பெண்களுக்கு தாலி செய்ய தங்கத்தை மானிய அடிப்படையில் அரசு வழங்கும். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். ராகுல் காந்தி பிரதமர் ஆனவுடன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். இவ்வாறு கார்கே பேசினார்.