புதுச்சேரி: வாக்களிக்க செல்லவிடாமல் போலீஸார் தடுப்பதாக காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் புகார்

புதுச்சேரி: வாக்களிக்க செல்லவிடாமல் போலீஸார் தடுப்பதாக காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் புகார்
Updated on: 
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்களிக்க வரும் வாக்காளர்களை வாக்களிக்க செல்லவிடாமல் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் தடுப்பதாக காங்கிரஸ் வேட்பாளர் புகார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதற்காக 19 இடங்களில் 31 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை முதலே வாக்களர்கள் வருகை தந்து தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இதன்படி காலை 9 மணி நிலவரப்படி 19.20 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினருடன் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட திலகர் நகர், மோகன் நகர் பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு தட்டாஞ்சாவடி தொழிலாளர் துறை அலுவலகத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வாக்களிக்க விவிபி நகர் வழியாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வந்துள்ளனர். அவர்களை போலீஸார் மற்றும் துணை ராணுவ படையினர் தடுத்து வேறு வழியாகச் செல்லும்படி அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்த காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் சம்பவ இடத்துக்கு வந்து போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினரிடம் வாக்காளர்களை விவிபி நகர் வழியாக அனுமதிக்காத போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினரிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தார்.

மேலும், வாக்களிக்க வரும் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதாகவும், ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் புகார் கூறினார். போலீஸார் உயரதிகாரிகளின் உத்தரவின்படியே மாற்றுப்பாதையில் அனுப்பியதாக தெரிவித்தனர். ஆனாலும் வேட்பாளர் விநாயகம் தொடர்ந்து அவர்களிடம் கேட்டார்.

இதையடுத்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் அங்கு வந்து திலகர் நகர், மோகன் நகர் பகுதி வாக்காளர்கள் விவிபி நகர் வழியே தொழிலாளர் துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு செல்ல அனுமதிப்பதாக தெரிவித்தார்.

அதனையேற்று வேட்பாளர் விநாயகம் அங்கிருந்து சென்றார். இதேபோல், புதுப்பேட்டை பகுதியில் போலீஸார் துணை ராணுவத்தினர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் முகவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி: வாக்களிக்க செல்லவிடாமல் போலீஸார் தடுப்பதாக காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் புகார்
“இதுதான் தவெக போற்றும் ஜனநாயகமா!” - செவிலியர்கள் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in