புதுச்சேரியில் அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து காங்கிரஸ் நடைபயணம் தொடக்கம்!

புதுச்சேரியில் அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து காங்கிரஸ் நடைபயணம் தொடக்கம்!
Updated on
2 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளும் அரசின் செயல்பாடுகளை கண்டித்து ‘வாக் ஃபார் புதுச்சேரி’ நடைபயணத்தை காங்கிரஸ் கட்சி இன்று (ஜன.21) தொடங்கியுள்ளது.

புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தும், புதுச்சேரியில் நேர்மையான நிர்வாகத்தை அளிப்பது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது, பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பது, அதிகாரத்தில் இருப்பவர்களிடம் இருந்து மக்களைக் காப்பாற்றுவது என்ற குறிக்கோளுடன் புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளில் இந்தப் பாதயாத்திரை (வாக் ஃபார் புதுச்சேரி) நடைபெறுகிறது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பெருமாள் கோயில் தெருவில் தொடங்கிய இந்த நடைபயணத்தை கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தொடங்கி வைத்தார். புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தலைமையில் முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள பல்வேறு தெருக்களிலும் ஊர்வலமாக மக்களைச் சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

இதில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏ வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், காங்கிரஸ் துணைத் தலைவர் தேவதாஸ், முத்தியால்பேட்டை தொகுதி நிர்வாகி ஈரம் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி உள்பட பல்வேறு அணியினர் கலந்து கொண்டனர்.

மேலும், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி , பிரியங்கா காந்தி ஆகியோரின் படங்களுடன் கூடிய முகக் கவசங்களை பலர் அணிந்தபடியும் முத்தியால்பேட்டை தொகுதி முழுவதும் வலம் வந்தனர். நடைபயணம் தனியார் ஓட்டல் எதிரே முடிந்தது.

அங்கு செய்தியாளர்களிடம் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியது: “புதுச்சேரி மாநில மக்கள் எந்தளவுக்கு என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக ஆட்சியில் அவதிப்படுகிறார்கள் என்பதை மக்களிடம் இருந்து தெரிந்து கொள்வதற்காவும், 2026 சட்டப்பேரவை தேர்தலில் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் ஆட்சி வந்தால் புதுச்சேரி மாநில மக்களுக்கு நாங்கள் எந்தெந்த திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று மக்களிடம் கூறுவதற்கும், அவர்களின் குறைகளை கேட்கவும் இந்த பாதயாத்திரையை தொடங்கியுள்ளோம்.

இந்த நடைபயணம் புதுச்சேரி மக்களுக்கானது. அவர்களின் வாழ்வாதாரத்துக்கானது. புதுச்சேரியில் கடந்த நான்கரை ஆண்டு கால என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை, கஞ்சா, போதைப்பொருள் தாராளமாக உலாவந்து புதுச்சேரியில் உள்ள இளைஞர்கள் சீரழிவது, வேலை வாய்ப்பு இல்லாத நிலை, விவசாயிகள் விரோத நடவடிக்கைகள், தொழிலாளர் விரோத செயல்கள் என மக்களை சந்திக்கும்போது தெரிகிறது.

இந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில் ஊழலை தவிர வேறொன்றும் இல்லை. முதல்வரின் துறையாக இருந்தாலும், கல்வித் துறை, பொதுப் பணித்துறை, விவசாயத் துறை என அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. இந்த ஆட்சியில் லஞ்சம் கொடுக்காமல் எதுவும் நடக்காது. நான்கரை ஆண்டுகளில் 390 ரெஸ்டோ பார்களை திறந்து புதுச்சேரி மாநில மக்களின் நிம்மதியை குலைத்திருக்கிறார்கள். இதற்கான முழு பொறுப்படையும் முதல்வர், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஏற்றுக்கொள்ள வேண்டும். புதுச்சேரி கலாச்சாரத்தை சீரழித்திருக்கிறார்கள்.

ரூ.10 ஆயிரம் கோடிக்கு போலி மத்திரை தயாரித்து இந்தியாவில் உள்ள 8 மாநிலங்களுக்கு அந்த மருந்துகள் அனுப்பப்பட்டு மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். புதுச்சேரியிலும் அந்தப் போலி மருந்துகள் உலாவுகிறது. இதில் முதல்வர், சட்டப்பேரவைத் தலைவர், தொழில்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்த ஆட்சியில் ஒட்டுமொத்தமாக ஊழலை தவிர வேறொன்றும் நடக்கவில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு செல்கின்றனர். இதை மக்கள் மத்தியில் சொல்லி மாற்றம் கொண்டுவர வேண்டும். புதுச்சேரி மாநில மக்கள் மாற்றத்தை இப்போது விரும்புகிறார்கள். அந்த மாற்றம் காங்கிரஸ் கட்சியினுடையதாக இருக்க வேண்டும். இதனை மக்களுக்கு நினைவூட்ட வேண்டும் என்பதற்காக வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வருகின்றோம்.

நாட்டு மக்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்காக ராகுல் காந்தி பாதயாத்திரை சென்றார். அதேபோல புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளிலும், காரைக்காலில் 5 தொகுதிகளிலும் எங்களின் நடைபயணம் தொடங்கியுள்ளது. தொண்டர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து 23 தொகுதிகளிலும் இந்த நடைபயணம் தொடரும். 2026-ல் காங்கிரஸ் கட்சி அரியணையில் ஏறும்” என்றார்.

தொடர்ந்து அவர் “நானும், கட்சித் தலைவரும் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து மக்கள் நடைபயணத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டோம். கண்டிப்பாக வருவதாக கூறியுள்ளார். தேதி விரைவில் அறிவிப்போம்” என்றார்.

மாநில தலைவர் வைத்திலிங்கம் கூறும்போது, “நாளைய புதுச்சேரி நல்ல புதுச்சேரியாக இருக்க வேண்டும். இது மக்களுக்கான, இளைஞர்களுக்கான, தொழிலாளர்களுக்கான நடைபயணம். இது நிச்சியமாக வெற்றிபெறும்” என தெரிவித்தார். இந்த நடைபயணம் பிப்ரவரி 3-ம் தேதி வரை பல்வேறு தொகுதிகளிலும் தொடர்கிறது.

புதுச்சேரியில் அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து காங்கிரஸ் நடைபயணம் தொடக்கம்!
“தாய்க் கழகம் என நினைத்து தீய கழகத்தில் இணைந்த வைத்திலிங்கம்...” - சசிகலா விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in