

திருமாவளவன்
சென்னை: ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் சக்தியாக பரிணமிக்க கூடாது என்பதற்காக அமைச்சரவையில் விசிக இடம் பெற்றது விமர்சிக்கப்படுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விசிக சார்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டு மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. விசிக தலைவர் திருமாவளவன் மாநாட்டு மலரை வெளியிட கவிஞர் காசி ஆனந்தன் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் இசை கச்சேரி, நடன நிகழ்ச்சி, கவியரங்கம் என கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசியதாவது: உளுந்தூர்பேட்டை மாநாட்டில் 234 தொகுதி மாவட்ட செயலாளர்களும் 39 தொகுதிகளுக்கும் நியமனம் செய்யப்பட்ட மண்டல பொறுப்பாளர்களும் மாநில பொறுப்பாளர்களும் ஒரே மேடையில் அமர வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன், அதை நடைமுறைப்படுத்தியதில் பிழை ஏற்பட்டது. 400 இருக்கைகள் போடப்பட்ட நிலையில் ஒவ்வொருவரோடும் கூடுதலாக சிலர் மேடை ஏறியதில் நெரிசல் ஏற்பட்டது. இளம் சிறுத்தைகள் எல்லா தடுப்புகளையும் தாண்டி என்னோடு செல்பி எடுக்க முண்டியடித்ததால் இந்த நிலை ஏற்பட்டது.
இது நடைமுறை சிக்கல் தானே தவிர நம்மை பிடிக்காதவர்கள் விமர்சிப்பதைப் போல ஒழுங்கீனம் இல்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை ஒழுங்கீனமானவர்கள் என்று சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். இந்த இயக்கம் வலிமை பெற்று விடக்கூடாது என்பதற்காக உளவியல் தாக்குதலை நிகழ்த்துகிறார்கள்.
முதல்வர் விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு எத்தகைய அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை அரசியல் களத்தில் நாள்தோறும் ஈடுபடக்கூடிய அத்தனை பேரும் நன்கு அறிவர். நீண்ட நெடிய பாரம்பரியம், கட்டமைமைப்பு உள்ள பெரிய கட்சிகளே தனது நெடுநாள் வாக்கு வங்கியை இழந்து நிற்கின்றன. அதை பற்றி எல்லாம் பேசாதவர்கள் ஆளும் கட்சியாகவோ, எதிர்கட்சியாகவோ இல்லாத ஒரு கட்சி, நாங்கள் தான் அடுத்து ஆளப்போகிறோம் என்று உரிமை கோராத விசிகவை குறிவைக்கின்றன.
கூடாரம் காலி, திருமாவளவனோடு இருந்தவர்கள் எல்லாம் வெளியேறி போய்விட்டார்கள் என்று கூறியவர்களின் கன்னங்களில் ஓங்கி அறைவது போல் விசிகவினர் லட்சக்கணக்கிலே திரண்டு வந்தார்கள். மாநாடு முடிந்த பின் முதல்வர் விஜய் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அவர் சொன்னார், ‘சார் மிரட்டிட்டீங்க... ஃபயர் சார்’ என கூறினார்.
வன்னி அரசுவை அமைச்சரவையிலே இடம்பெற செய்ததை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. விசிக அமைச்சரவையில் இடம் பெற்றதை அவர்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. இதன் மூலம் விசிக என்ற இயக்கமும், அதன் தலைமையையும் மேலும் வலிமைபெறும். அதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் சக்தியாக பரிணாமம் பெறுவார்கள். இதை தடுத்தாக வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வின் போது தமிழக சமூக நீதித்துறை அமைச்சரும், விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, விசிக பொதுச்செயலாளர்கள் து.ரவிக்குமார், ம.சிந்தனைச்செல்வன், விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி, காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ இ.ஜோதிமணி, இயக்குநர் ரா.பார்த்திபன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில நிதி செயலாளர் ச.செந்தில்குமார், விசிக தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்செல்வன், மா.வீரக்குமார் மற்றும் விசிக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.