புதுச்சேரி இண்டியா கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளே முடியாத நிலையில், திமுக-வும் காங்கிரஸும் போட்டிபோட்டுக் கொண்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றன.
புதுச்சேரி சட்டப் பேரவைக்கு ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 16-ம் தேதியே தொடங்கிவிட்டது. மார்ச் 23-ம் தேதி மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். இந்த நிலையில், இண்டியா கூட்டணியின் பிரதானக் கட்சிகளான திமுக-வும் காங்கிரஸும் ஆளுக்கொரு பக்கம் இழுப்பதால் இன்னும் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் இறுதியாகவில்லை. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜெகத்ரட்சகனுடன் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் தலைமையிலான குழுவினர் இரண்டாம் கட்டமாகப் பேசியும் இழுபறி நீடித்து வருகிறது.
தமிழகத்தில் இண்டியா கூட்டணிக்கு திமுக தலைமை ஏற்பது போல் புதுச்சேரிக்கு தாங்கள் தலைமை ஏற்க வேண்டும் எனச் சொல்கிறது காங்கிரஸ். ஆனால், தமிழகத்தைப் போல் தாங்களே கூட்டணிக்கு தலைமை ஏற்க வேண்டும் என எதிர்பார்க்கிறது புதுச்சேரி திமுக.
கடந்த தோ்தலில் மொத்தமுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், திமுக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆனால், இம்முறை தங்களுக்கு சரிபாதி தொகுதிகளைக் கேட்கிறது திமுக. இதனால் பேச்சுவார்த் தைகள் முடிவுக்கு வராமல் இழுக்கிறது. இதற்கு நடுவே, புதுச்சேரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணலை நேற்று முன் தினம் நடத்தி முடித்தார் ஸ்டாலின். இதையடுத்து, திமுக-வினர் போட்டியிட விரும்பும் தொகுதிகளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய திமுக தலைமை ஒப்புதல் அளித்ததாகத் தெரிகிறது. கூட்டணி உடன்பாடு எட்டப்பட்ட பிறகு, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் வேட்புமனுவை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு நடுவே, புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் தலைமையிலான குழுவினர் காங்கிரஸ் மேலிடத்துடன் ஆலோசனை நடத்த வேட்பாளர் பட்டியலுடன் டெல்லி விரைந்துள்ளனர். இந்நிலையில், தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் புதுச்சேரி திமுக-வினர் தங்களின் விருப்பத் தொகுதிகளில் நேற்று வேட்பு மனு தாக்கலைத் தொடங்கினர். அதன்படி, திமுக சார்பில் முதலியார்பேட்டை தொகுதியில் எம்எல்ஏ-வான சம்பத், தட்டாஞ்சாவடியில் டாக்டர் ரித்திஷ், உப்பளத்தில் அனிபால் கென்னடி ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களை நேற்று தாக்கல் செய்தனர். இதேபோல் மணவெளி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் அரசு கொறடா அனந்தராமனும் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இது குறித்து சம்பத்திடம் கேட்டதற்கு, “வேட்பு மனு தாக்கலுக்கான கால அவகாசம் குறைவாக உள்ளது. மேலும் இன்று (நேற்று) நல்ல நாள் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளோம். தமிழ்நாட்டைப் போல புதுச்சேரியிலும் ‘திராவிட மாடல்’ ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ஆகவே, இம்முறை கண்டிப்பாக நாங்கள் தான் ஆட்சி அமைப்போம். தொகுதி பங்கீடு மற்றும் தொகுதிகள் இறுதியாகும் பட்சத்தில் தலைமை என்ன சொல்கிறதோ, அதன்படி நடப்போம்” என்றார். அனந்தராமனோ, “இன்று நல்ல நாள் என்பதால் மனுத்தாக்கல் செய்துள்ளோம். அதன்பிறகு தலைமை என்ன சொல்கிறதோ அதற்குக் கட்டுப்படுவோம்” என்றார்.
இவர்களைப் போலவே பாஜக அமைச்சர் ஜான்குமாரின் மகனும், தற்போதைய நெல்லித்தோப்பு தொகுதி எம்எல்ஏ-வுமான ரிச்சர்ட் பாகூர் தொகுதியில் நேற்று மனு தாக்கல் செய்தார். இதே தொகுதியில் ஜான்குமாரின் மற்றொரு மகன் ரீகனும் மனு தாக்கல் செய்தார். இவர், ஜோஸ் சார்லஸ் மன்றத்தின் தலைவராக உள்ளார். நெல்லித்தோப்பு தொகுதியில் ஜான்குமாரின் மனைவி ஜெஸ்டின் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர்கள் மூவருமே தங்களது மனுவுடன் கட்சிப் பெயரை குறிப்பிடும் விண்ணப்பத்தை இணைக்கவில்லை. அதனால் இவர்கள் லட்சிய ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களாக களம்காணலாம் என்று கூறப்படுகிறது.
நல்ல நாள் பார்த்து சிலர் நேற்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தாலும் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக தரப்பில் வேட்பாளர்கள் தயாராக இருந்தும் யாரும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.