

சென்னை: ‘தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். மேகேதாட்டு அணை கட்டுவதை தடுக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக எம்.பி எல்.கே.சுதீஷ், பிரதமர் மோடியை சந்தித்தார்.
இது குறித்து அக்கட்சியின் சார்பில் வெளியான அறிக்கையில், ‘தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே.சுதீஷ் இன்று (ஆக.3) நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தமிழக விவசாயிகளின் உரிமையை பறிக்கும் நோக்கில் நடந்து கொள்ளும் கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோரிக்கைகள் வைத்தார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தது. அப்போது திமுக சார்பில் ஒரு மாநிலங்களவை இடமும், 10 சட்டப்பேரவைத் தொகுதிகளும் தேமுதிகவுக்கு வழங்கப்பட்டது.
தேமுதிகவுக்கு வழங்கப்பட்ட மாநிலங்களவை இடத்தில் எல்.கே.சுதீஷ் எம்.பியாக தேர்வானார். திமுக சார்பில் 10 பேர் போட்டியிட்ட நிலையில், விருத்தாசலத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா மட்டும் வெற்றி பெற்றார். திமுக கூட்டணியில் இருந்த அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குப் பின்னர் தவெக கூட்டணிக்கு தாவிய நிலையில், தேமுதிக இப்போதும் திமுக கூட்டணியில் நீடிக்கிறது.