ஆற்காடு அருகே சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் இசையமைப்பாளர் தேவா உடல் அடக்கம்

ஆயிரக்​கணக்​கானோர் திரண்டு கண்​ணீர் அஞ்​சலி
ஆற்காடு அருகே சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் இசையமைப்பாளர் தேவா உடல் அடக்கம்
Updated on: 
2 min read

ஆற்​காடு: தமிழ் திரை​யுல​கில் கானா பாடல்​கள் மூலம் தனி முத்​திரை பதித்த இசையமைப்​பாளர் ‘தேனிசைத் தென்​றல்’ தேவா​வின் உடல், ராணிப்​பேட்டை மாவட்​டம் ஆற்​காடு அருகே உள்ள சக்​கரமல்​லூரில் 72 குண்​டு​கள் முழங்க அரசு மரி​யாதை​யுடன் நேற்று அடக்​கம் செய்​யப்​பட்​டது.

இசையமைப்​பாளர் தேவாவுக்கு நேற்று முன்​தினம் காலை சென்​னை​யில் உள்ள வீட்​டில் திடீரென நெஞ்​சுவலி ஏற்​பட்​டது. இதையடுத்து அவர் உடனடி​யாக மருத்​து​வ​மனைக்​குக் கொண்​டு​செல்​லும் வழி​யிலேயே உயி​ரிழந்​தார். அவரது மறைவு திரை​யுல​கினர், இசைக் கலைஞர்​கள், அரசி​யல் கட்​சி​யினர் மற்​றும் ரசிகர்​களிடையே பெரும் சோகத்தை ஏற்​படுத்​தி​யது.

இதையடுத்​து, அவரது உடலை சொந்த ஊரான ராணிப்​பேட்டை மாவட்​டம் ஆற்​காடு அடுத்த சக்​கரமல்​லூர் ஊராட்​சிக்கு உட்​பட்ட அண்ணா நகரில் உள்ள கிருஷ்ணவேணி பண்​ணைத் தோட்​டத்​தில் நல்​லடக்​கம் செய்​வதற்​கான ஏற்​பாடு​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. சென்​னை​யில் இருந்து சிறப்பு வாக​னம் மூலம் தேவா​வின் உடல், நேற்று மாலை அவரது பிறந்த ஊரான பழைய மாங்​காடு கிராமத்​துக்​குக் மாலை 3.30 மணிக்கு கொண்​டு​வரப்​பட்​டது. அங்​குப் பொது​மக்​கள் அஞ்​சலிக்​காகச் சிறிது நேரம் வைக்​கப்​பட்​டது.

பின்​னர், மேள​தாளங்​கள் மற்​றும் இசைக் கருவி​கள் முழங்க தேவா​வின் உடல் சக்​கரமல்​லூரில் உள்ள கிருஷ்ணவேணி பண்​ணைத் தோட்​டத்​துக்​குக் கொண்​டு​செல்​லப்​பட்​டது. அங்கு பொது​மக்​கள் பார்​வைக்​காக வைக்​கப்​பட்ட அவரது உடலுக்கு உறவினர்​கள், கிராம மக்​கள் மற்​றும் ரசிகர்​கள் மாலை அணி​வித்து இறுதி மரி​யாதை செலுத்​தினர்.

250 போலீ​ஸார் பாது​காப்பு: தமிழக அரசு சார்​பில் அரசு மரி​யாதை​யுடன் தேவா​வின் உடல் நல்​லடக்​கம் செய்​யப்​படும் என அறிவிக்​கப்​பட்​டதைத் தொடர்ந்​து, மாவட்ட நிர்​வாகம் சார்​பில் முன்​னேற்​பாடு​கள் செய்​யப்​பட்​டன. நல்​லடக்​கம் நடை​பெறும் இடம் தயார் செய்​யப்​பட்​டு, தேவை​யான கட்​டமைப்​புப் பணி​களும் மேற்​கொள்​ளப்​பட்​டன.

தேவா​வின் உடல் வைக்​கப்​பட்ட பண்ணை வீடு மற்​றும் நல்​லடக்​கம் நடை​பெறும் இடத்தை மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் சிபின் பார்​வை​யிட்டு ஆய்வு செய்தார். அங்கு சுமார் 250 போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். மேலும், பண்ணை வீட்​டின் முன்பு இசைக் கலைஞர்​கள் தேவா​வின் இசைப் பாடல்​களை வாசித்து அஞ்​சலி செலுத்​தினர்.

இதைத்​தொடர்ந்​து, 24 போலீ​ஸார் அணிவகுத்து நின்று 72 குண்​டு​கள் முழங்க அரசு மரி​யாதை செலுத்​தப்​பட்​டது. பின்​னர், தேவா​வின் உடல் மாலை 4.30 மணிக்கு நல்​லடக்​கம் செய்​யப்​பட்​டது. இதில் அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா மற்​றும் உறவினர்​கள் பங்​கேற்று இறு​திச் சடங்​கு​களைச் செய்​தனர்.

தமிழக அரசு சார்​பில் அமைச்​சர் காந்​தி​ராஜ், மாவட்ட ஆட்​சி​யர் ப்ரியா ஆகியோர் மலர் வளை​யம் வைத்து அஞ்​சலி செலுத்​தினர். மேல்​மரு​வத்​தூர் ஆதிப​ராசக்தி கோயிலைச் சேர்ந்த அன்​பழகன், பாடகி அனு​ராதா ராம், நடிகர் ஜெய், இயக்​குநர் ராஜா, இயக்​குநர் சேரன், முன்​னாள் அமைச்​சர்​கள் ஆர்​.​காந்​தி, கே.சி.வீரமணி, சேவூர் ராமச்​சந்​திரன், சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் தாஹிரா (ராணிப்​பேட்​டை), சுதாகர் (காட்​பாடி), வினோத் கண்​ணன் (வேலூர்), சுகு​மார்​ (ஆற்​காடு), முன்​னாள் சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் ஈஸ்​வரப்​பன், பழனி உள்​ளிட்​டோர் அஞ்​சலி செலுத்​தினர். இசைக் கலைஞர்​கள், பாடகர்​கள், அரசி​யல் கட்​சிப் பிர​முகர்​கள் மற்​றும் ஏராள​மான பொது​மக்​களும் பங்​கேற்று இறுதி மரி​யாதை செலுத்தினர்.

தனது இசை​யால்​ பல தலை​முறை ரசிகர்​களைக்​ கவர்​ந்​த தே​வா​வின்​ உடல்​, அவர்​ பிறந்​த மண்​ணிலேயே அரசு மரி​யாதை​யுடன்​ நல்​லடக்​கம்​ செய்​யப்​பட்​ட நிகழ்​வு, அப்​பகுதி மக்​களிடையே சோகத்​தை​யும்​ நெகிழ்​ச்​சி​யை​யும்​ ஏற்​படுத்​தி​யது.

ஆற்காடு அருகே சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் இசையமைப்பாளர் தேவா உடல் அடக்கம்
“அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவோம்” - அண்ணாமலை அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in