

சென்னை: தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சந்தித்து, தவெக அரசு மீது பல்வேறு புகார்களை கூறி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய விவகாரம் மற்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றாமல் விட்டது போன்ற விவகாரங்கள் ஆளும் தவெக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சென்னை, கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சந்தித்து புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
பெண் ஆட்சியருக்கு ஆளும் கட்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாலியல் தொல்லை அளித்ததாக ஜூலை 31-ல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதை காவல் துறைக்கோ, உள்புகார் குழுவுக்கோ அனுப்பாமல் ஆளும் கட்சித் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு சென்றது ஏன் என்பது குறித்து அரசிடம் விளக்கம் கோர வேண்டும். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.
துறையூரில் ஒருவர் தாக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாரில், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் உள்ளிட்டோர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். அந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் மிரட்டப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் சமயபுரம் காவல் ஆய்வாளரின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும். காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிய மாநில அளவிலான எச்சரிக்கை அமைப்புடன் கூடிய தனிப்பிரிவை உருவாக்க வேண்டும்.
காவல் மரணங்கள் குறித்து 24 மணி நேரத்துக்குள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்குத் தகவல் தெரிவிக்கவும், நீதித்துறை நடுவர் விசாரணை மற்றும் காணொலிப் பதிவுடன் கூடிய உடற்கூராய்வு மேற்கொள்ளவும் அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.
நாகப்பட்டினம், மாதவரத்தில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத் துறை, வருவாய் புலனாய்வு இயக்குநரகம், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, தேசியப் புலனாய்வு முகமை ஆகியவை விசாரணை மேற்கொள்ள பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் உதயநிதி வலியுறுத்தி உள்ளார்.
ஆளுநரைச் சந்தித்த பின்னர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சி எம்எல்ஏவை முதல்வர் கைது செய்வார் என எதிர்பார்த்தோம். ஆனால், அவர் பாதிக்கப்பட்டவர் பக்கத்தில் நிற்காமல், குற்றவாளிகள் பக்கத்தில் இருக்கிறார்.
சம்பந்தப்பட்ட எம்எல்ஏவைக் காப்பாற்றும் முயற்சியில் தலைமைச் செயலரும் ஈடுபட்டுள்ளார். எனவே, அவரையும், முதல்வரையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணனும் அவருடைய ஆதரவாளர்களும் சொந்தக் கட்சி பெண் நிர்வாகியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகன், ஒரு பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.ஆலந்தூரில் வேம்புலி என்ற பகுதிச் செயலாளர், ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துகிறார். தற்போது மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை.
தமிழகத்தில் தொடர்ந்து போதைப்பொருள் கைப்பற்றப்படும் விவகாரத்துக்கு பின்னால் மிகப்பெரிய நெட்வொர்க் உள்ளது. எனவே இதையும் சிபிஐ விசாரிக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நாங்கள் செய்ததைத்தான் இந்த அரசு செய்துள்ளது. ஆனால் நாங்கள் துணிவாக செய்தோம். விசிக, ஐஎம்எல், கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதால், இந்த விஷயத்தில் டபுள் ஆக்டிங் மாதிரி பண்ணியிருக்கிறார்கள். இவ்வாறு உதயநிதி கூறினார்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மக்கள் பவனில் ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை நேற்று சந்தித்து புகார் மனு அளித்தார்.
மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு மீறியது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு அவமதித்துள்ளது. தீபத் தூணில் தீபம் ஏற்றப்படாதது பெரும்பான்மை சமுதாய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அனைவரும் உண்மையான காவல் துறை அதிகாரிகள்தானா என்ற சந்தேகம் எழுகிறது.
ஏனென்றால் பலர் தங்களது சீருடையில் பெயர் அடையாள அட்டையைக் கூட அணிந்திருக்கவில்லை. பக்தர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல் துறை என்ற பெயரில் அத்துமீறல்கள் நடைபெற்றுள்ளன. இவ்வளவு சம்பவங்கள் நடந்தும் முதல்வர் விஜய் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது பெண் ஆட்சியர் புகார் அளித்த பிறகும், 3 மாதங்களாக முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யாத காவல் துறை, எப்படி முறையான நடவடிக்கை எடுக்கும்?
எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். அதேபோல், அமைச்சர் ஒருவர் பெண் எஸ்.பி.யை இரவு நேரத்தில் வீட்டுக்கு அழைத்ததாகப் புகார் எழுந்துள்ளது. 2 நாட்களுக்கு முன்பு வல்லத்திலும் தவெகவைச் சேர்ந்த ஒருவர் பாலியல்ரீதியான குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். கடந்த 7 மாதங்களில் 660 கொலைகள் நடந்துள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இல்லை.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களில் 80 சதவீதம் பேர் தவெகவைச் சேர்ந்தவர்கள் என்று உதயநிதி கூறியுள்ளார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. தேர்தலுக்கு முன்பே நான் கூறிய பல விஷயங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.