

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் வேறு எந்த தொகுதிக்கும் இல்லாத வகையில், திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மணப்பாறை தொகுதியை தங்களுக்கு ஒதுக்கும்படி கேட்டு வருகின்றன.
மேலும், இந்தத் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக மனிதநேய மக்கள் கட்சியின் அப்துல் சமது உள்ள நிலையில், அந்தக் கட்சியும் மீண்டும் இந்தத் தொகுதியை கேட்டுள்ளதாக தெரிகிறது.
ஆனால், 2008-ல் தொகுதி மறுசீரமைப்பில் மணப்பாறை தொகுதி உருவானது முதல் இதுவரை திமுக இங்கு போட்டியிடாததால், இந்த முறை திமுகவுக்கே ஒதுக்க வேண்டும் என அக்கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இதுகுறித்து மணப்பாறை திமுகவினர் கூறியது: 2008-ல் தொகுதி மறுசீரமைப்பில் மணப்பாறை தொகுதி உருவானது முதல், திமுக கூட்டணி சார்பில் 2011-ல் காங்கிரஸ், 2016-ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், 2021-ல் மனிதநேய மக்கள் கட்சி என தொடர்ந்து கூட்டணி கட்சிகளே போட்டியிட்டு வருகின்றன. இதுவரை திமுக போட்டியிடவில்லை.
கடந்த முறை மமக அப்துல்சமது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் ஏற்றுக் கொண்டோம். ஆனால் இம்முறை திமுகவுக்கே தொகுதியை ஒதுக்க வேண்டும். இதற்காகவே இந்தத் தொகுதியில் 61 பேர் விருப்ப மனு கொடுத்து, நேர்காணலில் பங்கேற்றனர் என்றனர்.
ஆனால், இந்தத் தொகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டு வருவதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து திமுக நிர்வாகி ஒருவர் கூறியது: விசிக சிட்டிங் எம்எல்ஏவான முகமது ஷா நவாஸின் நாகை தொகுதியை இந்த முறை திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என அக்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அதேபோல, நாகை தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஒருவேளை நாகை தொகுதி திமுகவுக்கோ, மார்க்சிஸ்ட் கட்சிக்கோ ஒதுக்கப்பட்டால் மணப்பாறை தொகுதியை கேட்டுப் பெற்று முகமது ஷா நவாஸை அங்கு நிறுத்தலாம் என விசிக யோசிக்கிறது என்றார்.
அதேவேளையில் திமுக தெற்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் ஒன்றைக் கூட கூட்டணிக்கு தாரைவார்க்க விருப்பமில்லை என கூறப்படுவதால், மணப்பாறை யாருக்கு என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.