ராதாபுரம் யாருக்கு? - அப்பாவு தொகுதிக்கு திமுகவில் அடிபிடி ஆரம்பம்

ராதாபுரம் யாருக்கு? - அப்பாவு தொகுதிக்கு திமுகவில் அடிபிடி ஆரம்பம்
Updated on
1 min read

சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவுவின் தொகுதியான ராதாபுரத்தில் மீண்டும் அவருக்கு சீட் கிடைக்குமா கிடைக்காதா என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு அவரது இடத்தைப் பிடிக்க திமுக-வுக்குள் பலரும் கச்சைகட்டி களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் திருநெல்வேலி மாவட்டத்தில் தங்கி இருந்து திமுக நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசி வருகிறார். அதன்படி வள்ளியூரில் திமுக நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிய போது, ராதாபுரம் தொகுதி நிலவரம் திமுக-வுக்குச் சாதகமாக இல்லை என சபரீசன் வெளிப்படையாகச் சொன்னதாக ஒரு தகவல் சொல்கிறார்கள். இதையடுத்து, அப்பாவு இடத்தைப்பிடிப்பதற்காக காத் திருக்கும் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கிரகாம்பெல், நெல்லை முன்னாள் எம்பி-யான ஞானதிரவியம் ஆகியோர் புதிய உத்வேகத்துடன் களத்துக்கு வந்திருக்கிறார்கள்.

கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் சந்திப்பு என்று கிரகாம்பெல் சுறுசுறுப்பாகி இருக்கிறார். ‘நம்ம அண்ணாச்சி’ என்று ஞானதிரவியமும் சமூக வலைதளங்கள் மூலம் லைம்லைட்டுக்கு வந்திருக்கிறார். எம்பி-யாக இருந்தபோது ஞானதிரவியம் செய்த சாதனைகளை பெண்கள் பட்டியலிடுவது போல் வீடியோக்கள் தயாராகி சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இவர்களின் எடக்கு மடக்கை சமாளிக்கும் விதமாக, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தொகுதியை தனக்கே தக்கவைக்கும் முயற்சியில் அப்பாவுவும் திவீரமாகி இருக்கிறார். ராதாபுரம் தொகுதிக்காக அவர் செய்திருக்கும் சாதனைகள் குறித்தும் பெண்கள் பேசும் வீடியோக்களும் ரகளை கட்டுகின்றன.

ராதாபுரம் தொகுதிக்குள் இருக்கும் கல்குவாரிகளில் வரம்பு மீறி கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு கேரளாவுக்குக் கடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த கனிமவளக் கொள்ளை விவகாரம் இந்தத் தேர்தலில் முக்கிய விவகாரமாகப் பேசப்படுகிறது. ராதாபுரத்தில் திமுக-வுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம் என்கிறார்கள்.

இந்நிலையில், ‘பொய்களும் வதந்திகளும்’ என்ற தலைப்பிட்டு அப்பாவு திடீர் ஸ்டேட்மென்ட்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். ‘ராதாபுரம் தொகுதியில் எங்களுக்கு சொந்தமாக கல்குவாரிகள் உள்ளதாக பொய்ய்யான தகவல் பரப்பப்படுகிறது. ராதாபுரத்தில் மட்டுமல்ல... வேறு எந்தப் பகுதியிலும் எனது பெயரிலோ எனது குடும்பத்தினர் பெயரிலோ எந்தவொரு கல்குவாரியும் கிடையாது. அப்படி இருப்பதாக நிரூபித்தால் அந்தக் குவாரியை அவர்களது பெயரிலேயே எழுதித் தந்துவிடுகிறேன்’ என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார் அப்பாவு.

அதேசமயம் அப்பாவுவுக்கு எதிரான சமாச்சாரங்களை ஊதிப் பெரிதாக்கி இம்முறை எப்படியும் அவருக்கு சீட் கிடைக்கக் கூடாது என்ற திட்டத்துடன் திமுக-வினரே ஈடுபட்டு வருவதாக அவரது ஆதரவாளர்கள் ஆதங்கப்படுகிறார்கள். வயோதிகம் காரணமாகவும் இம்முறை அப்பாவுவுக்கு வாய்ப்புக் கிடைக்காது என அவரது எதிர்முகாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

கடந்த மக்களவை தேர்தலில் இப்படி எல்லாம் உள்குத்து மேளா நடந்ததால் தான் நெல்லை தொகுதியை காங்கிரஸுக்கு கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டது திமுக தலைமை. இம்முறை அதே நிலைமை ராதாபுரத்துக்கும் வந்துவிடும் போலிருக்கிறது.

ராதாபுரம் யாருக்கு? - அப்பாவு தொகுதிக்கு திமுகவில் அடிபிடி ஆரம்பம்
ஐயூஎம்எல்-க்கு 2 தொகுதிகள்: கறார் காட்டிய திமுக

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in