

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் அதிரடியாகத் தொடங்கியுள்ளன. முதல் நாளே ஐயூஎம்எல் கட்சிக்கு திமுக விதித்த ‘கறார்' நிபந்தனை மற்றும் அக்கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் மயக்கமடைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் நேற்று டி.ஆர். பாலு தலைமையிலான திமுக உயர்நிலைக் குழுவுடன், காதர் மொகிதீன் உள்ளிட்ட ஐயூஎம்எல் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்கள் கட்சியினர் 5 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக காதர் மொகிதீன் கோரிக்கை வைத்தார். பின்னர் பேச்சுவார்த்தையின் போது, "குறைந்தபட்சம் 4 இடங்களாவது வேண்டும்" என இறங்கி வந்தார்.
"புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்துள்ளதால், பழைய கட்சிகள் இடங்களை விட்டுக் கொடுக்க வேண்டும். கடந்த முறை போட்டியிட்ட 3 இடங்களிலுமே நீங்கள் தோல்வியடைந்தீர்கள். எனவே, இந்த முறை 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும்" என திமுக தரப்பு கறாராகத் தெரிவித்துவிட்டது.
பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாங்கள் 5 இடங்கள் கேட்டோம், ஆனால் அவர்கள் 2 இடங்கள் மட்டுமே தருவதாகக் கூறியுள்ளனர். இது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசிப்போம். இது கொள்கை ரீதியான கூட்டணி, தொகுதிகளுக்காக நாங்கள் கூட்டணி மாறமாட்டோம்" என்று உறுதியாகத் தெரிவித்தார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஐயூஎம்எல் கட்சி வாணியம்பாடி, சிதம்பரம், கடையநல்லூர் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், அந்த மூன்றிலுமே அக்கட்சி தோல்வியைத் தழுவியது. எனவே இந்த முறை திமுக தனது வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய தொகுதிகளைக் குறைக்க முடிவு செய்திருக்கிறது. இன்று மதிமுக, மனித நேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியவற்றுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
மயக்கமடைந்த காதர் மொகிதீன்: செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போதே, காதர் மொகிதீன் எதிர்பாராத விதமாக திடீரென மயக்கமடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் அவரைத் தாங்கிப் பிடித்து அறிவாலயத்திற்குள் அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டது. தற்போது ரமலான் நோன்பு காலம் என்பதால், காதர் மொகிதீன் நோன்பு இருந்து வருகிறார். நீண்ட நேரம் வெயிலில் நின்றதாலும், உடல் சோர்வினாலும் இந்த மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் நலமுடன் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.