

சென்னை: வெனிசுலா மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியதையும், அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவியை கைது செய்து சிறையில் அடைத்ததையும் கண்டித்து, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேற்று முன்தினம் அறிவித்தது.
இதன்படி கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கட்சியினர் தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கம் முன்பு நேற்று போராட்டத்தை தொடங்கினர். போலீஸார் அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்திய நிலையில் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால், அவர்களை கைது செய்தனர்.
போராட்டம் குறித்து இரா.முத்தரசன் கூறியதாவது: வெனிசுலா மீது அமெரிக்கா குண்டு வீசி, அந்நாட்டின் அதிபர், அவரது மனைவியை கடத்திச் சென்று சிறையில் அடைத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
அதுமட்டுமின்றி இனி வெனிசுலா நாட்டையே அமெரிக்கா தான் நிர்வகிக்கும் என்று அறிவித்திருப்பதும் மிகவும் ஆபத்தானது. அமெரிக்காவின் செயல்பாட்டை கண்டித்து பல்வேறு நாட்டின் பிரதமர், அதிபர்கள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
ஆனால் நம் பிரதமர் மவுனம் சாதித்து வருகிறார். எனவே இச்சம்பவத்துக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்பை வன்மையாகக் கண்டிக்க பிரதமர் மோடி முன் வர வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலாளர் எம்.ரவி, தேசியக் குழு உறுப்பினர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.