

சென்னை: கல்லூரி மாணவர்களிடம் மறைந்து கிடக்கும் படைப்பாற்றலையும், பல்வேறு கலைத்திறமைகளையும் வெளிக்கொண்டுவரும் வகையில் ‘சாரங்’ என்ற கலாச்சார விழாவை சென்னை ஐஐடி ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில், 52-வது ஐஐடி சாரங் கலாச்சார விழா ஜன.8 முதல் 12-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி நேற்று கூறியதாவது: இந்திய அளவில் மாணவர்களால் நடத்தப்படும் மிகப்பெரிய கலாச்சார விழா ஐஐடி சாரங் விழா ஆகும். அதன்படி 52-வது சாரங் கலாச்சார திருவிழா ஜன.8-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி முடிவடைகிறது.
இவ்விழாவில், இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்து 500 கல்லூரிகளைச் சேர்ந்த 80 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்துகொள்கின்றனர். இவ்விழாவை பிரபல கலை இயக்குநர் தோட்டாதரணி தொடங்கி வைக்கிறார்.
கிளாசிக்கல் நைட், கோரியோ நைட், ஹிப்-ஹாப் எக்ஸ் நைட், ராக் நைட், பாப் நைட், இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், ‘ஸ்பாட்லைட்’ விரிவுரை, சொற்பொழிவு, பட்டறைகள், கண்காட்சிகள், கலந்துரையாடல்கள் என 200-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
தொடக்க விழாவில் மேற்கத்திய இசை நிகழ்ச்சிகளுடன் தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்கலாம். சாரங் விழாவை சமூக நோக்குடனும் கொண்டாடும் வகையில் கைவினைக் கலைஞர்களின்பொருட்கள் கொண்ட வளாக சந்தைகளும் இடம்பெறுகின்றன.
இந்த ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியாக மாணவர்கள் பங்கேற்கும் மாதிரி ஐக்கிய நாடு சபை கூட்ட நிகழ்வு முதல்முறையாக நடத்தப்படுகிறது. 20-க்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு ரூ.5 லட்சம் மதிப்புள்ள பரிசுகளும் வழங்கப்பட இருக்கின்றன.
இவ்விழாவைக் காண அனுமதி இலவசம். போட்டிகளுடன் கூடிய குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க மட்டும் அனுமதி கட்டணம் செலுத்த வேண்டும். சாரங் விழாவை கண்டுகளிக்க அனைவரையும் வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஐஐடி கலாச்சார நிகழ்வு செயலாளர் ரத்னம் சாய் சங்கல்ப், ஆசிரியர்கள் ஆலோசகர் (கலாச்சாரம்) பேராசிரியர் சுஷாந்தா குமார் பனிகிராஹி, டீன் (மாணவர் நலன்) சத்யநாராயணா என்.கும்மாட்டி ஆகியோர் இவ்விழாவின் முக்கிய அம்சங்களை விளக்கினர்.