மேட்டூர் அருகே அன்புமணியின் பிரச்சாரத்தில் அனுமதியின்றி நுழைந்த நாதக வேட்பாளரால் பரபரப்பு

மேட்டூர் அருகே அன்புமணியின் பிரச்சாரத்தில் அனுமதியின்றி நுழைந்த நாதக வேட்பாளரால் பரபரப்பு
Updated on
2 min read

மேட்டூர்: மேட்டூர் அருகே மேச்சேரியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரத்தில் இருந்தபோது, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யா ராணி அவரது ஆதரவாளர்களுடன் கூட்டத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டூர் அருகே மேச்சேரி பேருந்து நிலையம் முன்பு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுக வேட்பாளர் வெங்கடாஜலத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யா ராணி மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் கொடி மற்றும் பதாகைகளுடன் நுழைந்து அன்புமணியிடம் பேச முயன்றார். அப்போது, அவர் நாடகம் எதுவும் போட வேண்டாம் எனக் கூறி விட்டு, காவல்துறையினரை அழைத்தார்.

பின்னர், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் பிரச்சார கூட்டத்தில் இருந்து நாதக வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அங்கிருந்து போக மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாதக வேட்பாளர் உள்ளிட்டோர் போலீஸாரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

தொடர்ந்து, நாதக வேட்பாளர் வித்யாராணி அழுதபடியே அவரது ஆதரவாளர்களுடன் சாலையில் அமர்ந்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தி வெளியேற்றினர்.

தொடர்ந்து, மேட்டூர் டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் காவல் ஆய்வாளர் மகேந்திரன் ஆகியோரிடம் என்னை கைது செய்யுங்கள் என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அவரையும் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 20-க்கும் மேற்பட்டோரை வாகனத்தில் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும், வேட்பாளரின் கார் மற்றும் அவரது 3 பிரச்சார வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய போது, நாதக வேட்பாளர் வித்யா ராணி, போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா ராணி நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் சிந்தாமணி முதல் கோவிந்தபாடி வரை இருசக்கர வாகன பேரணி நடத்துவதற்காக முன்கூட்டிய அனுமதி பெற்றுள்ளோம். அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் என எங்களை தடுத்து நிறுத்தினார்கள்.

நீண்ட நேரமாக காத்திருந்த போதும் எங்களை அந்த வழியாக செல்வதற்கு அனுமதிக்கவில்லை. என்னை சிறுவயதில் இருந்தே வளர்த்தவர்கள் என்ற உரிமையில் அன்புமணி ராமதாஸிடம் இதைப்பற்றி கூறலாம் எனச் சென்றேன். ஆனால், அவர் அப்புறம் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டார்.

என்னை மட்டும் தான் அனைத்து இடங்களிலும் சோதனை செய்கிறார்கள், வேறு எந்த வேட்பாளர்களையும் சோதனை செய்வதில்லை என்னை மட்டும் நிறுத்தி சோதனை செய்வது அசிங்கமாக இருக்கிறது. எல்லாக் கட்சியினரும் வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருகின்றனர். இதனை போலீஸார் கண்டு கொள்ளவில்லை. உளவுத்துறை மூலம் என்னை கண்காணித்து வருகின்றனர். மக்களை சந்திக்க விடாமல் தடுக்கின்றனர்.” என்றார்.

போலீஸார் தரப்பில் கூறும் போது, உரிய அனுமதி பெறாமல் வாகனப் பேரணி மேற்கொண்டனர். போலீஸார் தடுத்து நிறுத்தியும், கேட்காமல் மாற்று கட்சியின் பிரச்சாரத்தில் நுழைந்தனர். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணைக்கு பிறகு வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்பட அனைவரின் வாகனங்களையும் விடுவிக்கப்பட்டது, என்றனர்.

மேட்டூர் அருகே அன்புமணியின் பிரச்சாரத்தில் அனுமதியின்றி நுழைந்த நாதக வேட்பாளரால் பரபரப்பு
அதிமுக Vs விசிக: திண்டிவனம் தொகுதி யாருக்கு சாதகம்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in