

வேளச்சேரி மேம்பாலம் அருகே வாகன பராமரிப்புக்காக எடுத்துச் செல்லப்பட்ட பள்ளி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
சென்னை: வேளச்சேரி மேம்பாலம் அருகே பராமரிப்புக்காக எடுத்துச் செல்லப்பட்ட பள்ளி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
சென்னையில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன், வழக்கமான பராமரிப்பு பணிக்காக நேற்று மாலை எடுத்துச் செல்லப்பட்டது. வேளச்சேரி மேம்பாலம் அருகே சென்றபோது, வேனின் இன்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறியது.
அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் உடனடியாக வேனை சாலையோரமாக நிறுத்தி கீழே இறங்கினார். சில நிமிடங்களில் இன்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி வேன் முழுவதும் எரியத் தொடங்கியது.
இதுகுறித்து, தகவல் அறிந்ததும் வேளச்சேரி, மேடவாக்கம் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் வேன் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. வேன் தீப்பிடித்து எரிந்ததால், வேளச்சேரி மேம்பாலம் மற்றும் அதனை ஒட்டிய சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.